கொரோனா பெருந்தொற்று காலத்தில் இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசி, ரெம்டெசிவிர், டொசிலிசுமப் மீது பூஜ்ய வரி விதிக்க வேண்டும்: ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் கோரிக்கை

சென்னை: கொரோனா காலத்தில் இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசி, ரெம்டெசிவிர், டொசிலிசுமப் ஆகிய மருந்துகள் மீது பூஜ்ய வரி விதிக்க வேண்டும் என ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 43வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடந்தது. இதில் தமிழகத்தின் சார்பில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் கலந்துகொண்டார். இதில் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:

 ஜிஎஸ்டி கட்டமைப்பின் உரிமை, இருப்பிடம் மற்றும் செயல்பாட்டு மாதிரியை மீண்டும் பரிசீலனை செய்து வலுப்படுத்த வேண்டும். ஜிஎஸ்டி கட்டமைப்பின் வடிவமைப்பின் காரணத்தால்,  சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அக்கட்டமைப்புடன் முழுமையாக ஒருங்கிணைப்பது கடினமாகிறது. மேலும் உள்ளீடுகள் அல்லது உள்ளீட்டு வரவுகளுடன் தொடர்புடைய குறைபாடுகள் தீர்க்கப்படவேண்டும். இதனால், மாநில அரசுகள், சட்டப்படியாக தங்களுக்கு கிடைக்கவேண்டிய நிதிப் பங்கினைப் பெறுவதற்கு போராடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

மேலும், வேண்டா ெவறுப்புடன் செயல்படும் நன்கொடையாளராக மத்திய அரசு இருக்க முடியாது. மாநிலங்களும் அதன் அரசுகளும் இருப்பதால்தான் ஒன்றிய அரசு என்ற ஒன்று உள்ளது. அதை ஒன்றிய அரசு மறுக்க கூடாது. மறந்தால் மாநிலங்கள் நினைவூட்டும். ஜிஎஸ்டிக்கு பிறகு மத்திய அரசு அதிகார குவிப்பை மட்டுமே செய்கிறது. இது ஒன்றிய அரசின் மீதான மாநில அரசுகளின் நம்பிக்கையை குறைப்பாக உள்ளது. இது சீரழிவையே ஏற்படுத்தும்.  மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளின் தற்போதைய தலையாய பணி, கோவிட் பெருந்தொற்றினை எதிர்த்து நடவடிக்கை எடுப்பதேயாகும். பெருந்தொற்றினை எதிர்கொண்டு, கட்டுப்படுத்துவதன் பொருட்டு அவசியமான பல்வேறு மருத்துவ பொருட்களை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மாநில அரசு கொள்முதல் செய்கின்ற தடுப்பூசிகள் மற்றும் ரெம்டெசிவிர் மற்றும் டொசிலிசுமப் அடங்கிய மருந்துகளை கொள்முதல் செய்வதே முக்கியம்.  

இச்சூழ்நிலையில் மாநில அரசு அல்லது அதன் முகவர்கள் மேற்கொள்ளும் கோவிட் பெருந்தொற்று தடுப்பூசிகள், ரெம்டெசிவிர் மற்றும் டொசிலிசுமப் ஆகியவை மீது பூஜ்ய வரி விகிதத்தினை தற்காலிகமாகவாவது விதிக்க வேண்டும்.  இதன் மூலம் இத்தகைய அவசியமான பொருட்களின் மீதான விலை குறைவது மட்டுமின்றி, இதனை விற்பனை செய்பவர்களுக்கு பாதிப்பில்லாமல் உள்ளீட்டு வரி வரவு கிடைக்க வழி வகுக்கும்.  இதுகுறித்து பிரதமரு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார்.

எனவே, அத்தியாவசியமான இந்த பொருட்களுக்கு பூஜ்ய விகித வரி விதிக்க முடிவு எடுக்க வேண்டும். பூஜ்ய வரி விகிதம் தொடர்பாக எழும் சட்ட சிக்கல்களை ஒருமித்த கருத்து உருவாகும் பட்சத்தில் தீர்க்கலாம். மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்படும் கோவிட்-19 பெருந்தொற்றுக்கான குறிப்பிட்ட பொருட்களின் மீதான தற்காலிக ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விலக்கு மற்றும் மருத்துவ கருவிகள் ஆகியவற்றுக்கான வரி விகிதம் குறைப்பினை நாங்கள் ஆதரிக்கிறோம்.   பெருந்தொற்று காலத்தில் வரி விகித உயர்வு என்பது பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் என்பதால், வரிவிகித பரிசீலனைக் குழுவின் ஜவுளி மற்றும் காலணிகள் மீதான தலைகீழ் வரிவிகித கட்டமைப்பின் திருத்தம் தொடர்பான பரிந்துரையினை அடுத்த கூட்டம் வரை தள்ளி வைக்கலாம். இவ்வாறு பேசினார்.

Related Stories:

>