மகளின் காதலனை பேச அழைத்து துண்டு துண்டாக வெட்டி நிலத்தில் புதைத்த தந்தை: ஆந்திராவில் பயங்கரம்

திருமலை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் மண்டலம், பெங்கரகுந்தா கிராமத்தைச் சேர்ந்த சைலஜா, டிரைவராக வேலை செய்யும் தனசேகர் ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இது சைலஜாவின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. மேலும் சைலஜா, தனசேகர் இருவரும் தங்களுக்கு தெரியாமல், திருமணம் செய்து கொள்வார்கள் என்று அச்சமடைந்துள்ளனர். இதனால் கடந்த 22ம் தேதி இரவு சைலஜாவின் தந்தை பாபு, தனசேகருக்கு போன் செய்து ‘‘உன்னிடம் தனியாக பேச வேண்டும். என்னுடைய விவசாய நிலம் அருகே வா’’ என்று அழைத்துள்ளார். இதனால் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த தனசேகர், பாதியிலேயே விட்டுவிட்டு, பாபு அழைத்த இடத்திற்கு சென்றார்.

பின்னர் நீண்ட நேரமாகியும் தனசேகர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் தனசேகர் வேறு எங்காவது சென்றிருக்கலாம் என மறுநாள் முழுவதும் அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர். ஆனால் 23ம் தேதி முழுவதும் தனசேகர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் கடந்த 24ம் தேதி காலை பலமனேர் காவல் நிலையத்தில் தனசேகரின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில் சைலஜாவின் தந்தை பாபு தனது சொந்த விவசாய நிலத்தில் கொடூரமாக தனசேகரை கொலை செய்து, பின்னர் உடல் பாகங்களை தனிதனியாக வெட்டி  புதைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாபுவை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனக்கோரி, தனசேகரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் தனசேகரன் உறவினர்களை சமாதானப்படுத்தி உரிய தண்டனை பெற்று தரப்படும் என உறுதி அளித்த பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories:

More
>