ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு யாஸ் புயல் நிவாரணம் ரூ.1000 கோடி: பிரதமர் மோடி உடனான ஆய்வு கூட்டத்தை புறக்கணித்த மம்தா

கொல்கத்தா: யாஸ் புயலால் பாதித்த ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். பிரதமர் மோடி உடனான ஆய்வுக் கூட்டத்தை மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாஸ் புயல் கடந்த 26ம் தேதி காலை ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே கரையை கடந்தது. இதனால், ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.  புயல் தாக்கியதில் சுமார் 3.5 லட்சம் வீடுகள் சேதமடைந்தன. ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டனர். 5 பேர் பலியாகினர்.  

மூன்று மாநிலங்களில் விவசாய நிலங்கள், வீடுகள், கடைகளில் வெள்ள புகுந்தது. ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதல்வர்கள் நவீன் பட்நாயக், மம்தா பனார்ஜி ஆகியோர் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், யாஸ் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி நேற்று ஆய்வு செய்தார். முதலில் ஒடிசா சென்ற மோடி, புவனேஸ்வரில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ஒடிசா கவர்னர் கணேஷி லால், முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பிரதாப் சாரங்கி மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தொடர்ச்சியான சூறாவளிகளின் சிக்கல்களில் இருந்து மீள்வதற்காக நீண்டகால தீர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஒரு வாரத்தில் மொத்த சேதங்களை அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசியிடம் நிதி கோருவதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்தை முடித்துவிட்டு, கடுமையாக பாதிக்கப்பட்ட பாலசோர், பாத்ரக் பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் மோடி ஆய்வு செய்தார். தொடர்ந்து, மேற்கு வங்கம் சென்ற மோடி அங்கு கலைகுண்டா விமான படை தளத்தில் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், முதல்வர் மம்தா பனார்ஜி கூட்டத்திற்கு தாமதமாக வந்தார். சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே இருந்த அவர், புயல் பாதிப்பு குறித்து அறிக்கை மற்றும் நிவாரண நிதியாக சுமார் ₹20,000  கோடி கேட்டு அறிக்கையாக மோடியிடம் கொடுத்துவிட்டு, எதுவும் பேசாமல் சென்றுவிட்டார். அம்மாநில அதிகாரிகளையும் மோடியுடன் பேச விடவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், புயலால் பாதித்த 3  மாநிலங்களுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.  இதில், ஒடிசாவுக்கு ரூ.500 கோடி, மேற்கு வங்கத்திர்கு ரூ.250 கோடி,  ஜார்க்கண்ட்டுக்கு ரூ.250 கோடி என ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பெரிய  மாநிலமான மேற்கு வங்கத்திற்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து பாகுபாடு காட்டி  வருவதாக மம்தா குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போதும் குறைந்த அளவிலேயே  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மம்தா விளக்கம்

மம்தா கூறுகையில், ‘‘பிரதமர் மோடி உடனான ஆய்வு கூட்டம் பற்றி எனக்கு தெரியாது. கூட்டம் குறித்து எனக்கு தெரிவிக்கும்போது, நான் திகாவில் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தேன். மற்றொரு நிகழ்ச்சி ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்ததால், உடனடியாக அங்கு செல்ல வேண்டியிருந்தது. இதைப் பற்றி பிரதமர் மோடியிடம் தெரிவித்து அனுமதி பெற்றே சென்றேன். வேண்டுமென்றே ஆய்வுக்கூட்டத்தை புறக்கணிக்கவில்லை’’ என்றார்.  மேற்கு வங்கத்தில் மீண்டும் முதல்வரான பிறகு முதல் முறையாக மோடி- மம்தா சந்திப்பு நடந்துள்ளது. கடைசியாக கடந்த 23ம் தேதி கொல்கத்தாவில் நடந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். அப்போது, ‘ஜெய் ராம்’ என்ற கோஷத்துடன் அவரது பேச்சில் குறுக்கீட்டதால் அவர் அங்கிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு கண்டனம்

மத்திய அரசு தரப்பில், ‘‘ஆய்வு கூட்டத்திற்கு பிரதமர் மோடி வந்த பிறகும், மேற்கு வங்க மாநில அரசு தரப்பில் யாரும் வரவில்லை. ஆளுநர் தன்கர், மத்திய அமைச்சர்கள் அரை மணி நேரம் காத்திருந்தும் யாரும் வரவில்லை. அதே வளாகத்தில் மம்தா இருந்த போதும், பிரதமரை வரவேற்க வராமல் இருந்தார். தாமதமாக வந்த அவர் 15 நிமிடத்தில் புறப்பட்டு சென்று விட்டார். மம்தா அராஜகமாக நடந்து கொள்கிறார். பிரதமருக்கு எதிரான மனநிலையில் அவர் இருக்கிறார்’’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>