×

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி  தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட  சுகாதார பணியாளர்களுக்கு முறையான வழிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி  போடப்பட்டது. இதையடுத்து, 28 நாட்களுக்கு பின் மீண்டும் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாவது டோஸ் செலுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஏற்கனவே தடுப்பூசி  போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி  செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு  தடுப்பூசி மருந்து போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியை ஆரம்ப கட்டத்தில் பொதுமக்கள் போட தயக்கம் காட்டினர். இதனால், அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் தடுப்பூசி முகாம்களில் குறைந்த அளவிலேயே தடுப்பூசி போட ஆர்வம் காட்டினர்.

இந்நிலையில்தான் இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து கொரோனாவில் 2வது அலை வேகமாக பரவியது. அதன்படி, இந்தியா முழுவதும் தினசரி பாதிப்பு 4.25 லட்சத்தை தாண்டியது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் தினசரி 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். அடுத்து கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம், டெல்லி, பீகார் என நாடு முழுவதும் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை, ஆக்சிஜன், மருந்து உள்ளிட்டவை கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். உயிரிழப்பும் அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக, பொதுமக்கள் பலரும் தடுப்பூசி போட ஆர்வமுடன் மருத்துவமனைக்கு வந்தனர். அதேநேரம்,  தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.  

இதனால் போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதையொட்டி, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. கடந்த மே மாதம் தொடக்கத்தில் தமிழகத்தில் தினசரி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில்தான் நாடு முழுவதும் 18 வயதினருக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மே மாதம் 1ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவித்தபடி தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 18 வயது நிரம்பியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி மே மாதம் 1ம் தேதி முதல் போடப்படவில்லை.

திட்டமிட்டபடி மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், குஜராத்,  சட்டீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் மட்டுமே மே 1ம் தேதி 18 வயதில் இருந்து 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதே நேரம் கடந்த அதிமுக ஆட்சியில் தடுப்பூசி 6 சதவீதம் வீணடிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. தடுப்பூசி வீணாக்கும் முதல் மாநிலம் தமிழகம் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில்தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக மே 7ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்றதில் இருந்து, கொரோனா தொற்று பரவலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரி செய்ய, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் மற்றும் சிலிண்டர்கள் இறக்குமதி செய்யும் பணிகள் துரித வேகத்தில் நடந்தது.

இதன்மூலம் தமிழகத்தில் தற்போது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேகப்படுத்தி வருகிறார். அதன்படி, 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், 18 வயதில் இருந்து 44 வயதுடையவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 20ம் தேதி திருப்பூர் மாவட்டம், நேதாஜி பூங்காவில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தை மாநில அரசுகளே செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

இந்த வயதிற்குட்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்வதால், இத்திட்டத்தின் முதற்கட்டத்தில், அதிக தொற்று பாதிப்பு அபாயம் உள்ளவர்களுக்கும், தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கும் தடுப்பூசி செலுத்திட வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 26ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் பேட்டி அளித்தபோது, ‘‘தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவில் இருந்து மக்களை காப்பதில் மிக மிக முக்கியம் தடுப்பூசிதான். இதுதான் மிக மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. 16.1.2021 அன்று தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை இல்லாத அளவிற்கு 26ம் தேதி மட்டும் 2,24,544 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.

தடுப்பூசி போடப்படும் பணி தொடங்கிய நாள் முதல் மே 7 வரை சராசரியாக ஒரு நாளைக்கு 61,000 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு, சராசரியாக ஒரு நாளைக்கு 78,000 தடுப்பூசிகள் போடப்பட்டு வந்திருக்கிறது. இந்த அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு சராசரியாக 6 சதவீத அளவில் இருந்த தடுப்பூசி வீணடிப்பு கடந்த இரண்டு வாரங்களில் ஒரு சதவீதமாக குறைத்திருக்கிறோம். 44 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் தடுப்பூசிகளில் தற்போது  3 லட்சத்து 14 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டின் தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி கொண்டு இருக்கிறோம்.

18 வயதிலிருந்து 44 வயதுக்குள் இருக்கிறவர்களுக்கு தமிழ்நாடு அரசு வாங்கக்கூடிய தடுப்பூசிகளை பொறுத்தவரைக்கும் ஏற்கனவே பெறப்பட்டுள்ள 12.85 லட்சம் தடுப்பூசிகளையும், அடுத்து பெறவுள்ள 11.50 லட்சம் தடுப்பூசிகளையும் முழுமையாக பயன்படுத்தி தொற்று அபாயம் அதிகமாக உள்ளவர்களுக்கும், பெரிய தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. தடுப்பூசி தான் இன்றைக்கு நமது காவல்காரனாக விளங்கிக்கொண்டு இருக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தயங்க வேண்டாம். நானே தடுப்பூசி போட்டுக் கொண்டேன். தடுப்பூசி போட்டுக் கொள்வதால் என்ன பயன் என்று கேட்டீர்கள் என்றால், ஒருவேளை கொரோனா தொற்று தாக்கினாலும் அதனால் ஒரு பெரிய பாதிப்பு ஏற்பட நிச்சயம் வாய்ப்பில்லை. நிச்சயமாக இருக்காது.

எளிதாக தொற்றை வெல்லலாம் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதனால் பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, வற்புறுத்தி, கெஞ்சி கேட்டுக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். தடுப்பூசி நெருக்கடியை சமாளிக்க உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளை வெளியிட்டு இருக்கிறோம். நேரடியாக தடுப்பூசியை வாங்க இருக்கிறோம். அதேபோல தமிழ்நாட்டிலேயே தடுப்பூசியை தயாரிக்கவும் திட்டமிட்டு இருக்கிறோம். அதனால்தான் கடந்த 25ம் தேதி செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் நிறுவனத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டேன்.

இன்னும் சில மாதங்களில் பெற்றவுடன் தடுப்பூசி போடுவதை ஒரு மக்கள் இயக்கமாகவே, ஒரு மாபெரும் இயக்கமாகவே நடத்துவதற்கு  திட்டமிட்டு இருக்கிறோம். அப்பொழுது அனைவரும் முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன் என்றார். இதை தொடர்ந்து கடந்த 26ம் தேதி) பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில், ‘‘கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தியை உடனே தொடங்க, செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தடுப்பூசி நிறுவனத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அதிகரிக்கும் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை
தமிழகத்தில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் (27ம் தேதி) ஒரே நாளில் மட்டும் 3,23,915 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 18 வயதில் இருந்து 44 வயது வரை உள்ள 2,58,694 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மையங்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் நேற்று முன்தினம் 23,241 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரை 18,59,255 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் டாக்டர்கள் உள்ளிட்ட அனைவரும் தற்போது வலியுறுத்தி கூறுவது, ”தமிழகத்தில் கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்றால் 18 வயதில் இருந்து அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்” என்பதையே வலியுறுத்தி வருகின்றனர். பொதுமக்களிடமும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வம் தற்போது அதிகளவில் ஏற்பட்டுள்ளது.

Tags : BC ,Stalin , Vaccination is necessary to control corona: Chief Minister MK Stalin raises awareness
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...