தீவிர தூய்மை பணி திட்டத்தை பயன்படுத்தி சென்னையில் 1093 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர தூய்மைப்பணி திட்டத்தின்கீழ் 1093 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன, இப்பணிகளை கண்காணிக்க மண்டல அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என முதன்மை செயலாளர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்றும் தீவிர தூய்மைப்பணி திட்டத்தை நேற்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி துவக்கி வைத்தார். அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிகள், சாலைகள் மற்றும் தெருக்களில் நீண்ட நாட்களாக தேங்கிக்கிடக்கும் குப்பை மற்றும் கட்டிட கழிவுகள் என கண்டறியப்பட்ட 113 இடங்களில் நேற்று தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மை பணியின் மூலம் 15 மண்டலங்களிலும் நேற்று ஒருநாள் மட்டும் 264 மெட்ரிக் டன் குப்பைகளும், 829 மெட்ரிக் டன் கட்டிட கழிவுகளும் என மொத்தம் 1093 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இப்பணிகளை தொடர்ந்து கண்காணித்து தீவிரப்படுத்தவும், மாநகராட்சியின் தூய்மையை பராமரிக்கவும், மண்டலங்களுக்கு அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் திருவொற்றியூர்- உமாபதி (செயற்பொறியாளர், நகரமைப்பு துறை), மணலி-கணேசன் (செயற்பொறியாளர் கட்டிட துறை), மாதவரம்-சக்திமணிகண்டன் (மேற்பார்வை பொறியாளர் நகரமைப்பு துறை); தண்டையார்பேட்டை- விஜயகுமார் (மேற்பார்வை பொறியாளர் மழைநீர் வடிகால் துறை); ராயபுரம்-ஜெயராமன் (கண்காணிப்பு பொறியாளர் மின்சார துறை வட்டார அலுவலகம் -வடக்கு); திரு.வி.க.நகர்-துரைசாமி (தலைமை பொறியாளர் மின்சார துறை); அம்பத்தூர்- விஜயகுமார் (மேற்பார்வை பொறியாளர் கட்டிட துறை); அண்ணா நகர்- சரவணபவானந்தம் (மத்திய மேற்பார்வை பொறியாளர் வட்டார அலுவலகம்); தேனாம்பேட்டை- பாபு (மேற்பார்வை பொறியாளர் சிறப்பு திட்டங்கள் துறை); கோடம்பாக்கம் ராஜேந்திரன் (தலைமை பொறியாளர் இயந்திரம் மற்றும் கட்டிடம் துறை).

வளசரவாக்கம்-வீரப்பன் (மேற்பார்வை பொறியாளர் திடக்கழிவு மேலாண்மை துறை); ஆலந்தூர்-மகேசன் (தலைமை பொறியாளர் திடக்கழிவு மேலாண்மை துறை மற்றும் நகரமைப்பு); அடையாறு-நந்தகுமார் (தலைமை பொறியாளர் -பொது); பெருங்குடி-பாலசுப்பிரமணியம் (தெற்கு மேற்பார்வை பொறியாளர் வட்டார அலுவலகம்); சோழிங்கநல்லூர் பாலசுப்பிரமணியம் (மேற்பார்வை பொறியாளர் இயந்திர பொறியியல் துறை) ஆகியோர் ஆவர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் நாள்தோறும் காலை நேரத்தில் ஆய்வு செய்து அதுகுறித்த விவரங்களை தலைமையிடத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த தீவிர தூய்மை பணி திட்டத்தை பயன்படுத்தி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை தூய்மையாக பராமரிக்க அலுவலர்கள் அனைவரும் ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>