×

என்எல்சி ஒப்பந்த ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி தொழிலாளர்கள் கொரோனா தொற்று காரணத்தால் 50 சதவீதம் தொழிலாளர்களை மட்டுமே பணியில் அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பணியை புறக்கணித்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சியில் முதலாவது சுரங்க விரிவாக்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள், சொசைட்டி தொழிலாளிகள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நெய்வேலி நகர் பகுதிகளில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் என்எல்சி தொழிலாளர்கள் 50 சதவீத பணியாளர்களுடன் சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும் என தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
ஆனால் என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், சொசைட்டி தொழிலாளர்களை என்எல்சி நிர்வாகம் அனைவரும் பணிக்கு வரவேண்டும் என கூறியுள்ளது.

இந்நிலையில், நேற்று பணிக்கு வந்த அனைத்து தொழிலாளர்களும் பணியை புறக்கணித்து சுரங்க நுழைவு வாயிலில் வெளியே நின்றனர். அங்கு வந்த என்எல்சி அதிகாரிகள் தொழிலாளர்களிடம் பேச்சு நடத்தினர். என்எல்சி சுரங்க பகுதிகளில் தங்களுடன் பணியாற்றும் நிரந்தரத் தொழிலாளிகள், அதிகாரிகளுக்கு மட்டும் இரண்டு நாட்கள் பணிக்கு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை என்எல்சி நிர்வாகம் கொடுத்துள்ளது. இதே போன்று தங்களுக்கு வழங்க வேண்டும். கொரோனா பரவல் காரணமாக 50 சதவீதம் தொழிலாளர்களை மட்டுமே பணிக்கு அழைக்க வேண்டும் என ஒப்பந்த தொழிலாளர்கள் கூறினர். இது குறித்து நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள்  கலைந்து சென்றனர்.

Tags : NLC , NLC contract employees boycott work
× RELATED விபத்தில் என்எல்சி தனி அலுவலர் இறப்பு;...