×

அதிமுக ஆட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பாரபட்சம்!: ரூ.100 கோடி நிதியில் 90 கோடி திருமங்கலம் தொகுதிக்கே ஒதுக்கீடு..அமைச்சர் மூர்த்தி புகார்..!!

மதுரை: அதிமுக ஆட்சியில் 100 நாட்கள் வேலை திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 கோடி நிதியில் 90 கோடி திருமங்கலம் தொகுதிக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மாநகராட்சி மற்றும் மதிசியா சார்பில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர் மூர்த்தி, பதவியேற்கும் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். அதிமுக எம்.எல்.ஏக்கள் யாரையும் புறக்கணிக்கவில்லை என்று கூறிய அவர், அதிமுக ஆட்சியில் தான் திமுக வென்ற தொகுதிகள் புறக்கணிக்கப்பட்டன என்றார். 


மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதிமுக அரசு பாரபட்சமாக செயல்பட்டு திருமங்கலம் தொகுதிக்கு மட்டுமே 90 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது என்று புகார் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் மூர்த்தி, மதுரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் கொரோனா நோயாளியுடன் ஒருவர் மட்டுமே தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். நோயாளியின் உதவியாளருக்கும் தேவையான 3 வேளை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மதுரை மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுவதாக அமைச்சர் மூர்த்தி கூறினார். 



Tags : Minister ,Moorthy , AIADMK, 100 days work, Rs 100 crore fund, Thirumangalam constituency, Minister Murthy
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...