×

கொரோனா தொற்று நேரத்தில் 123 நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகள் விநியோகம்: அமைச்சர் ஹர்ஷ வர்தன்

டெல்லி: கொரோனா தொற்று நேரத்தில் 123 நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகள் விநியோகம் செய்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். அணிசேரா நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டெட்ராஸ் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தியதற்காகவும், மக்களுக்கான சுகாதார உரிமையை உறுதி செய்வதில் தொடர்ந்து ஒத்துழைப்புடனும் செயல்பட இந்த கூட்டத்தில் பங்கேற்க இந்தியாவுக்கு வாய்ப்பளித்ததற்காகவும், அசர்பைஜான் சுகாதாரத்துறை அமைச்சர் தேமூர் முசாயேவுக்கு டாக்டர் ஹர்ஷ வர்தன் நன்றி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் ஹர்ஷ வர்தன் பேசுகையில், அனைவரின் சுகாதாரத்துக்காக இந்தியா எப்போதும் பாடுபடும். கொரோனா தொற்று நேரத்தில், சொந்த தேவைகள் இருந்தபோதிலும், 59 அணி சேரா நாடுகள் உட்பட 123 நாடுளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகள் விநியோகத்தை நாங்கள் உறுதி செய்தோம். கோவிட்-19க்கான பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளை மேம்படுத்தும் உலக முயற்சிகளில் இந்தியா தீவிரமாக உள்ளது. ஏனென்றால், எல்லோரும் பாதுகாப்பு அடையும் வரை யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்.

உலகின் மிகப் பெரிய மருத்துவ சுகாதார திட்டமான, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை நாங்கள் தொடங்கி, பின்தங்கிய மக்கள் 500 மில்லியன் பேருக்கு இலவச சுகாதார காப்பீடு வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம். பொது சுகாதார கடமைகளை திறம்பட செய்வதில், அனைத்து அணிசேரா நாடுகளுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக உள்ளது.

அனைத்தும் உள்ளடக்கிய மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய உலகளாவிய நடவடிக்கைக்கு நாம் இணைந்து பணியாற்றுவோம். பொது சுகாதாரத்தின் அனைத்து பிரிவுகளிலும், அணிசேரா இயக்க நாடுகள் வலுவாக மீண்டு வரும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்று ஹர்ஷ் வர்தன் பேசியுள்ளார்.



Tags : Corona ,Minister ,Harsha Varadhan , corona
× RELATED 10 ஆண்டுகளில் மோடியின் பிரதமர் பதவி...