×

கண்டாச்சிபுரம் அருகே பரபரப்பு இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய இருபிரிவினர் இடையே தகராறு-அமைச்சர் பொன்முடி நடவடிக்கையால் உடனடி தீர்வு

கண்டாச்சிபுரம் : விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த திருமல்ராயபுரத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்தால், அதே சமூகத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உடலை அடக்கம் செய்து வந்தனர். இப்பகுதிக்கு விவசாய நிலங்களை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அந்த விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் அவ்வழியாக சடலத்தை எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக கடந்தாண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து வேறொரு இடத்தில் இடுகாடு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான கோப்பு விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுநீரக கோளாறால் நேற்று முன்தினம் உயிரிழந்த திருமல்ராயபுரத்தை சேர்ந்த சுப்ரமணி (63) என்பவரது உடலை புதிய இடத்தில் அடக்கம் செய்ய பள்ளம் தோண்டினர். ஆனால் அந்த இடத்திற்கு அருகில் கோயில் மற்றும் மற்றொரு சமூகத்தினரின் விவசாய நிலம் உள்ளதால் சுப்ரமணி உடலை அப்பகுதியில் அடக்கம் செய்ய அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் சடலத்தை அடக்கம் செய்வதற்காக தோண்டிய பள்ளத்தை மூடி தகராறில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளர் நல்லசிவம், உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் கார்த்திகேயன் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளுடன் இருசமூகத்தினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் பழைய இடத்திலேயே உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகளும் சம்மதம் ெதரிவித்தனர்.

எனினும் அங்கு உடலை கொண்டு செல்ல நிரந்த வழி ஏற்பாடு செய்து தர வேண்டும் என வற்புறுத்தினர். மேலும் நிரந்தர வழிக்கு  உடனடியாக  சாலை வசதி செய்து தரும் வரை உடலை எடுக்கமாட்டோம் என மீண்டும்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்ததும் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, திமுக முகையூர் ஒன்றிய செயலாளர் ரவிசந்திரன் மூலம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவலை கேட்டறிந்தார். ேமலும் அந்த தரப்பினரிடம் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஏற்கனவே உறுதிசெய்யப்பட்ட இடத்திற்கு ஒன்றிய செயலாளர் ரவிசந்திரன் மூலம் நாளை (இன்று) நிரந்தரமாக வழி ஏற்பாடு செய்து சாலை அமைத்து தருவதாக அமைச்சர் உறுதியளித்தார். இதனை ஏற்றுகொண்டு சுப்ரமணியின் உடலை  ஏற்கனவே அடக்கம் செய்து வந்த இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்.

Tags : Kandachipuram ,Minister ,Ponmudi , Kandachipuram: In Villupuram district Kandachipuram next to Thirumalrayapuram in case of death of members of the downtrodden community, belonging to the same community
× RELATED கண்டாச்சிபுரம் அருகே நிலத்தை...