×

முழு ஊரடங்கை மீறி ஊர் சுற்றுவோர் யார் ட்ரோன் கண்காணிப்பில் பெரியகுளம், தேனி நகரம்-சிக்கினால் வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை

தேனி/பெரியகுளம் :

தேனியில் முழு ஊரடங்கை மீறி, ஊர்சுற்றுபவர்களை ட்ரோன் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதையொட்டி பால், மருந்துக்கடைகள், மருத்துவமனைகள், அரசு துறை அலுவலகங்கள், வங்கிகள், பெட்ரோல் பங்குகள் செயல்படவும், ஓட்டல்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மதியம் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் பார்சல் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. கார், வேன், ஆட்டோக்கள், டூவீலர்கள்மருத்துவம், திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு மாவட்டத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. வெளிமாவட்டங்களுக்கு இ.பதிவு மூலம் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

தேவையின்றி சுற்றுவோர் மீது வழக்கு இந்நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கிலும் தேவையின்றி டூவீலர்களில் ஊர்சுற்றுவது வாடிக்கையாக உள்ளது. இந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, அபராதம் விதித்து வருகின்றனர். இருப்பினும் சிலர் விழிப்புணர்வு இல்லாமல் சாலைகளில் சுற்றித்திரிகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த போலீசார் நெடுஞ்சாலைகளில் முகாம் அமைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஆனால், நோய்கட்டுப்பாட்டு பகுதிகளில் இருப்பவர்கள் வெளியே வரவோ, வெளிநபர்கள் உள்ளே செல்லவோ தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் நோய்கட்டுப்பாட்டு பகுதிகளை விட்டு வெளியே வந்து செல்கின்றனர். இதை தடுக்க மாவட்ட காவல்துறை நிர்வாகம் ட்ரோன் மூலம் கண்காணித்து, மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி, தேனி நகரில் டிஎஸ்பி முத்துராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், ஜெயராணி ஆகியோர் மூலமாக டிரோன் மூலம் நகரை கண்காணிக்கும் பணி துவக்கப்பட்டது. தேனி நேரு சிலை, அரண்மனைப்புதூர் விலக்கு, பெரியகுளம் சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதி ஆகியவற்றில் டிரோன் கேமிரா மூலம் கண்காணிக்கும் பணி நடந்தது. அப்போது வானில் பறந்த டிரோன் மேலிருந்தபடியே நகர தரைப்பகுதியில் வீணாக சுற்றுவோர் குறித்து படம் பிடித்தது. இதனையடுத்து, வீடியோவில் பதிவான நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம்

பெரியகுளத்தில் கொரோனா பரவலை தடுக்க போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தி வருகின்றனர். மேலும் தேவையின்றி பொதுமக்கள், வாகனங்கள் செல்லக் கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ட்ரோன் மூலம் நகரில் உள்ள திண்டுக்கல் சாலை, கம்பம் சாலை, மற்றும் நகர் முழுவதும் பொதுமக்கள் ஊரங்கு விதிமுறைகளை கடைப்பிடிக்கின்றனரா எனகண்காணித்து வருகின்றனர். மேலும், பெரியகுளம் டிஎஸ்பி  முத்துக்குமார் பெரியகுளம் நகர், தென்கரை, வடகரை, ஜெயமங்கலம், மற்றும்  தேவதானப்பட்டி ஆகிய பகுதிகளின் காவலநிலைய ஊரடங்கு கட்டுப்பாட்டினை ட்ரோன் காட்சிகள் மூலம் ஆய்வு  செய்து வருகிறார்.

Tags : Periyakulam ,Theni , In the honey, the police are monitoring drone by drone. Corona 2nd wave spread in Tamil Nadu
× RELATED பெரியகுளம் நகரில் அதிமுக வேட்பாளர்...