×

டொமினிகாவுக்கு சட்டவிரோதமாக தப்பியதால் இந்தியாவிடம் சோக்சி ஒப்படைக்கப்படுவார்'; ஆன்டிகுவா பிரதமர் தகவல்

மும்பை: ரூ.13,500 கோடி கடன் மோசடியில் தேடப்படும் குற்றவாளியான மெகுல் சோக்சி கியூபாவுக்கு படகில் தப்பும் போது டொமினிகாவில் பிடிப்பட்டுள்ளார். அவரை நேரடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுப்பதாக ஆன்டிகுவா பிரதமர் கஸ்டன் பிரவுனி கூறி உள்ளார்.குஜராத்தின் வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி இருவரும் மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இதனால் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்க இருவரும் வெளிநாடு தப்பினர். நீரவ் மோடி லண்டனில் தஞ்சமடைந்தார். மெகுல் சோக்சி கடந்த 2018ம் ஆண்டு குடும்பத்துடன் கரீபியன் தீவுகளில் ஒன்றான ஆன்டிகுவா நாட்டுக்கு சென்றார். அந்நாட்டிலும் சோக்சி குடியுரிமை பெற்றுள்ளார். அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. இதற்கிடையே, கடந்த 23ம் தேதி சோக்சி ஆன்டிகுவாவிலிருந்து காணாமல் போனதாக அவரது வக்கீல் விஜய் அகர்வால் தெரிவித்தார். ஜாலி ஹார்பர் தீவில் சோக்சியின் கார் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அவரை காணவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆன்டிகுவா நீதிமன்றத்தில் சோக்சியை நாடு கடத்த வேண்டும், அவரது குடியுரிமையை ரத்து செய்ய வேண்டுமென 2 வழக்குகள் இருப்பதால், அந்நாட்டு போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். இந்நிலையில், சோக்சி கியூபாவுக்கு தப்பும் வழியில் படகில் சென்ற போது டொமினிகா தீவில் பிடிபட்டுள்ளார். தற்போது டொமினிகா போலீசார் கட்டுப்பாட்டில் உள்ள சோக்சியை ஆன்டிகுவா அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, ஆன்டிகுவா பிரதமர் கஸ்டன் பிரவுனி அளித்த பேட்டியில், ‘‘சட்டவிரோதமாக டொனிமிகா சென்ற சோக்சி பிடிபட்டுள்ளார். அவர் மிகப்பெரிய தவறு செய்து விட்டார். டொமினிகா அரசு, ஆன்டிகுவா மற்றும் இந்திய அரசுடன் தொடர்பில் உள்ளது. சோக்சியை மீண்டும் ஆன்டிகுவா அனுப்ப வேண்டாம் என டொமினிகா அரசிடம் வலியுறுத்தி உள்ளேன். அவரை நேரடியாக இந்திய சட்ட அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே டொமினிகாவிலிருந்து நேரடியாக இந்தியாவுக்கு சோக்சி நாடு கடத்தப்படுவார்’’ என்றார்.

நாடு கடத்தப்படுவது உறுதி
ஆன்டிகுவாவில் இருந்து சோக்சி வெளியேறி இருந்தால், அவரது குடியுரிமை ரத்து செய்யப்படும் என பிரதமர் கஸ்டன் பிரவுனி ஏற்கனவே கூறியிருந்தார். எனவே சோக்சி டொமினிகாவிலிருந்து ஆன்டிகுவா அனுப்பப்பட்டாலும், அங்கிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது உறுதி என இந்திய அதிகாரிகள் கூறி உள்ளனர். சோக்சி இந்தியாவும் கொண்டு வரப்பட்டுள்ளதால், பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

இந்தியாவுக்கு வர வாய்ப்பில்லை
சோக்சி வக்கீல் விஜய் அகர்வால் கூறுகையில், ‘‘சோக்சி இப்போது இந்திய குடிமகன் அல்ல. அவர் ஆன்டிகுவாவில் இருந்து சென்றதால், மீண்டும் ஆன்டிகுவாவுக்கு மட்டுமே அனுப்ப முடியும். அங்குள்ள நீதிமன்ற உத்தரவுப்படி மட்டுமே அவரை இந்தியா அனுப்ப முடியும். எனவே சோக்சி நேரடியாக இந்தியா அனுப்பப்படும் பேச்சுக்கே இடமில்லை’’ என்றார்.

Tags : Choksi ,India ,Dominica ,Antigua , Choksi will be extradited to India for illegally escaping to Dominica '; Antigua Prime Information
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!