×

ஒரு லட்சம் உணவுப்பொட்டலம் வழங்கும் திட்டத்துக்கு அன்னதான திட்ட நிதியிலிருந்து 2.51 கோடி ஒதுக்கீடு: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவு

சென்னை: கோயில்கள் சார்பாக ஒரு லட்சம் உணவுப்பொட்டலங்கள் வழங்கப்படும் திட்டத்துக்கு அன்னதான திட்ட மைய நிதியிலிருந்து 2.51 கோடி ஒதுக்கீடு செய்து அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கொரோனா தொற்று நோயினால் பெரும்பாலான ஏழை எளிய மக்கள்  தங்களது வாழ்வாதாரத்தை இழந்து  அன்றாட வாழ்க்கைக்கு  போராடி வரும் நிலையில், அவர்களது பசியை போக்கும் விதமாக கோயில்களில் இருந்து  உணவுப்பொட்டலங்களை வழங்க ஆணையிடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி கோயில்கள் வாயிலாக உணவு தயாரிக்கப்பட்டு உணவுப்பொட்டலங்களாக நாள்தோறும் ஏழை எளியோருக்கு கடந்த 12ம் தேதி முதல் வழங்கப்பட்டு  பொதுமக்கள் அதிகளவில் பயன்பெறும் திட்டமாக  வரவேற்பை பெற்றுள்ளது. ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் 5ம் தேதி வரை  உணவுப்பொட்டலங்களை வழங்கிட கோயில் நிர்வாகங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

இச்சேவையை தொடரும் நிலையில் 349 கோயில்களில் போதிய நிதி ஆதாரம் இல்லாதது என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் கோயில்களுக்கு இத்திட்டத்திற்கு தேவைப்படும் நிதி ஆதாரத்தினை கணக்கிட்டதில் ₹2 கோடியே 51 லட்சத்து 7 ஆயிரத்து 647 தேவைப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில்  உணவு தேவைப்படுவோருக்கு கோயில்கள் வாயிலாக  உணவுப்பொட்டலங்களை தொடர்ந்து வழங்கிட தேவைப்படும் நிதியினை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பேணப்பட்டு வரும் அன்னதான திட்ட மைய நிதியில் இருந்து கோயில்களுக்கு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Annadana ,Minister of Charity Sekarbabu , 2.51 crore from Annadana project fund for one lakh food parcels: Charity Minister Sekarbabu orders
× RELATED உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு...