×

சமூக ஊடகங்களுக்கு எதிரான விதிமுறைகளை கைவிட வேண்டும்: திருமாவளவன் எம்.பி வலியுறுத்தல்

சென்னை: பாஜ அரசு உடனடியாக சமூக ஊடகங்கள் தொடர்பாக வரையறுத்துள்ள விதிமுறைகளைக் கைவிட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  இந்தியாவில் செயல்பட்டு வரும் பெரும்பாலான அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் பாஜ அரசின் அச்சுறுத்தலுக்குப் பயந்து அதன் ஊதுகுழல்களாக மாறிவிட்ட சூழலில், சமூக ஊடகங்கள்தான் பெரும்பாலும் குடிமக்கள் தமது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்த வாய்ப்பளித்து வருகின்றன. இந்நிலையில், சமூக ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் ஒட்டுமொத்தமான ஒரு ”கண்காணிப்பு சாம்ராஜ்ஜியத்தை”  உருவாக்குவதே அவர்களின் நோக்கம்.

குடிமக்களைக் கண்காணிப்பதே சர்வாதிகாரிகளின் நடைமுறை. அதைத்தான்  பாஜ அரசும் செய்ய முயற்சிக்கிறது. மக்களின் அடிப்படை உரிமைகள் மீது நம்பிக்கை கொண்ட, ஜனநாயகத்தை நேசிக்கிற எவரும் இதை ஆதரிக்க முடியாது. எனவே, பாஜ அரசின் இந்த  சட்டவிரோத - வெகுமக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்துக் குரல் கொடுக்க முன்வருமாறு ஜனநாயக சக்திகள் யாவருக்கும் அறைகூவல் விடுக்கிறோம். அத்துடன், பாஜ அரசு உடனடியாக சமூக ஊடகங்கள் தொடர்பாக வரையறுத்துள்ள விதிமுறைகளைக் கைவிட வேண்டும்.  தமது சர்வாதிகாரப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Thirumavalavan , Drop rules against social media: Thirumavalavan MP insists
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு