சென்னை மாநகராட்சியில் சுகாதாரத்தை பேணிகாக்கும் வகையில் நீண்டநாள் தேங்கியுள்ள திடக்கழிவை அகற்ற தீவிர தூய்மை பணி துவக்கம்: தினசரி அறிக்கை சமர்ப்பிக்க ஆணையர் உத்தரவு

சென்னை: மயிலாப்பூர், 123வது வார்டுக்கு உட்பட்ட  பல்லக்கு மாநகர் தெருவில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பு  பகுதியில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள திடக்கழிவுகளை, தீவிர தூய்மை பணி திட்டத்தின் கீழ்  அகற்றும் பணியினை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்  மற்றும்  மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு ஆகியோர் நேற்று துவங்கி வைத்தனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளிலும் நாள்தோறும் சராசரியாக 5,000 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்பட்டு குறிப்பிட்ட அளவு குப்பை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு, இயற்கை உரமாகவும், உயிரி எரிவாயுவாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உலர்கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு மறுஉபயோகத்திற்கும், மறுசுழற்சிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 இந்த தூய்மை பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் தற்போது மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள குப்பை மற்றும் கட்டிட கழிவுகள் உள்ள பகுதிகள் மண்டல வாரியாக கண்டறியப்பட்டு தீவிர தூய்மைப் பணி திட்டத்தின் கீழ் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சி மண்டலம் 1 முதல் 15 வரைக்குட்பட்ட பகுதிகள், தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள், காலி இடங்களில் தேங்கியுள்ள குப்பை மற்றும் சாலைகளில் கொட்டப்பட்டுள்ள கட்டிட இடிபாட்டு கழிவுகளை தீவிர தூய்மைப்பணி திட்டத்தின் மூலம் அகற்றி சென்னை மாநகரை தூய்மையாக்கும் பணி தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்பணிகள் மண்டலம் 1 முதல் 3 வரை தனியார் நிறுவனம் மூலமாகவும், மண்டலம் 4 முதல் 8 வரை சென்னை மாநகராட்சி மூலமாகவும், மண்டலம் 9 முதல் 15 வரை உர்பேசர் மற்றும் சுமித் பெசிலிடிஸ் லிமிடெட்  மூலமாகவும் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த தூய்மைப்பணி திட்டத்தில் நாளொன்றுக்கு சுமார் 1300 தூய்மை பணியாளர்களும், 500 சாலை பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் 37 காம்பேக்டர் வாகனங்களும், 75 டிப்பர் லாரிகளும், 60 பொக்லைன் மற்றும் பாப்காட் இயந்திரங்களும், 180 பாட்டரி வாகனங்களும், 65 மூன்றுசக்கர வாகனங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு மேற்கொள்ளப்பட உள்ள தீவிர தூய்மைப் பணி திட்டத்தின் கீழ் நாள்தோறும் சுமார் 500 மெட்ரிக் டன் அளவிலான திடக்கழிவுகள் அகற்றப்பட உள்ளன.  இத்திட்டத்தின் கீழ் அடுத்த 10 நாட்களில் சுமார் 1500 மெட்ரிக் டன் குப்பைகளும் சுமார் 5000 மெட்ரிக் டன் கட்டிட இடிபாடு கழிவுகளும் அகற்றப்பட உள்ளன.

இந்த பணிகளை தீவிரமாக மேற்கொள்வதன் மூலம் சென்னை மாநகரம் முழுவதும் தூய்மையாக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்படும். நாள்தோறும் நடைபெறும் துய்மை பணிகள் இணை மற்றும் துணை ஆணையர்கள், தலைமை பொறியாளர் மற்றும் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு, அதுகுறித்த விவர அறிக்கையை தலைமையிடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>