×

சிறையில் குழந்தைகளுடன் தண்டனை அனுபவிக்கும் 7 பெண் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் சிறைக் கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்வது, பரோல் வழங்குவது தொடர்பாக மூத்த வக்கீல் வைகை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளும், இரு மாநில  சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களும் அறிக்கை தாக்கல் செய்தன.தமிழகத்தின் அறிக்கையில், ஏற்கனவே சிலர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். தற்போது, குழந்தைகளுடன் உள்ள 4 தண்டனை கைதிகள் உள்ளிட்ட 7 பெண் கைதிகள் சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றத்திற்கு உதவும் நபராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வக்கீல் ஆர்.வைகை ஆஜராகி, கைதிகள் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுபடி அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும்என்று கோரினார். இதையடுத்து நீதிபதிகள், தமிழக சிறைகளில் உள்ள 7 பெண் கைதிகளை விடுவிக்க அரசு முடிவு எடுக்க வேண்டும். சிறைக் கைதிகள் விடுதலை குறித்து உயர்மட்ட குழு எடுக்கும் முடிவுகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும். கைதிகளை விடுதலை செய்வதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உறவினர்களுடன் பேச வீடியோ கால் வசதி ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். கைதிகள் தங்கள் வக்கீல்களிடம் பேச அனுமதி வழங்க வேண்டும். வழக்கு ஜூன் 3ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.



Tags : Tamil Nadu , Action to release 7 female prisoners serving sentences with children in jail: ICC order to the Government of Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...