×

சட்டசபையில் பலத்தை 12 ஆக உயர்த்திய பாஜக; துணை முதல்வர் பதவியை கேட்டு ரங்கசாமிக்கு தொடர்ந்து நெருக்கடி: புதுச்சேரி அரசியலில் அடுத்தகட்ட பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் முடிந்து 23 நாட்களுக்குபின் எம்எல்ஏக்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகரான லட்சுமிநாராயணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அடுத்தகட்டமாக சட்டசபையின் சபாநாயகர், துணை சபாநாயகர் உள்ளிட்டோரை தேர்வு செய்ய விரைவில் மீண்டும் சட்டசபை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் 6 பேர், நியமன எம்எல்ஏக்கள் 3 பேர், பாஜகவுக்கு ஆதரவளிக்கும் சுயேச்சைகள் 2 பேர் என 11 பேர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

இதற்கிடைேய திருபுவனை தொகுதி சுயேச்சை எம்எல்ஏவான அங்காளனும், மரியாதை நிமித்தமாக பாஜக மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானாவை சந்தித்து ஆதரவு தெரிவித்ததால் அக்கட்சிக்கான ஆதரவு பலம் 12 ஆக அதிகரித்தது.
இந்நிலையில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட பாஜக எம்எல்ஏக்கள் 12 பேரும் நேற்று அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சேர்ந்து தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் நமச்சிவாயம் தலைமையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மரியாதை நிிமித்தமான சந்திப்பு என்று பாஜகவினர் கூறினாலும்,

சட்டசபையில் பாஜகவின் பலம் 12 ஆக அதிகரித்துள்ளது குறித்தும், உள்ளாட்சி தேர்தல்கள், அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்டவை தொடர்பாகவும் அவரிடம் எம்எல்ஏக்கள் ஆலோசித்ததாக தெரிகிறது. பாஜகவின் இந்த அதிரடி நடவடிக்கை முதல்வர் ரங்கசாமிக்கு அடுத்தகட்ட நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அவரது கட்சிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. சுயேச்சைகளில் 3 பேர் பாஜகவுக்கு வெளிப்படையாக தங்களது ஆதரவை தெரிவித்து அக்கட்சி எம்எல்ஏக்களின் கூட்டத்திலும் பங்கேற்று விட்டனர். ஆனால் மீதமுள்ள 3 சுயேச்சைகள் எந்த கட்சிக்கும் தங்களது ஆதரவை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

அவர்கள் நடுநிலையாக செயல்படும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் சட்டசபையில் தங்களுக்கான பலம் என்ஆர் காங்கிரசைவிட தங்களுக்கு அதிகமாக இருப்பதை முதல்வர் ரங்கசாமிக்கு சூசகமாக தெரிவித்துள்ள பாஜக, துணை முதல்வர் பதவியை பெற ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. துணை முதல்வர் பதவிைய கொடுத்தால் தனக்கான அதிகாரம் படிப்படியாக குறைக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் ரங்கசாமி மவுனம் காத்து வருகிறார். மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் துணை முதல்வர் பதவியை அக்கட்சிக்கு ஒதுக்கி ஒப்புதல் வழங்கிவிட்டால் மாநில அதிகாரத்தையும் பாஜக முழுமையாக தன்வசமாக்கிவிடும் என்ற அச்சம் ரங்கசாமிக்கு இருக்கிறது.

இதுவே அமைச்சரவை பதவியேற்க காலதாமதமாவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றன. இதனிடையே அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ரூ.3 ஆயிரம் கொரோனா நிவாரணம் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு கவர்னர் தமிழிசை உடனடியாக ஒப்புதல் அளித்த நிலையில், பாஜகவோடு இணைந்து செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கான நலத்திட்டங்கள் தடையின்றி கிடைக்கும் என்பதையும் சூசகமாக சுட்டிக் காட்டியுள்ளதாகவே கருதப்படுகிறது.


Tags : BJP ,Rangasamy ,Deputy Chief Minister ,Puducherry , BJP raises strength in assembly to 12; Crisis continues for Rangasamy seeking Deputy Chief Minister post: Next up in Puducherry politics
× RELATED நவராத்திரியின்போது மீன் சாப்பிடும் தேஜஸ்வி யாதவ்: பாஜவினர் கண்டனம்