×

ஓடிபி நம்பரை வைத்து ரூ53.25 லட்சம் அபேஸ்: போலீசார் துரித நடவடிக்கை எடுத்து மீட்டனர்

அண்ணாநகர்: வில்லிவாக்கத்தில் ஒருவரிடம் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி, அவரது ஓடிபி நம்பரை வைத்து ரூ53.25 லட்சத்தை மர்ம நபர் அபேஸ் செய்துவிட்டார். இதுகுறித்து துணை ஆணையரிடம் அளித்த புகாரின்பேரில் தனிப்படை போலீசார் விசாரித்தனர். பின்னர் வேறொரு கணக்கில் இருந்த அவரது பணத்தை மீட்டு தந்தனர். சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர், 18-வது தெருவை சேர்ந்தவர் அன்பரசு (62). ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர். இந்நிலையில், இவரது செல்போனில் நேற்று ஒரு மர்ம நபர் எஸ்பிஐ வங்கியிலிருந்து பேசுகிறேன். உங்களது வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ள லிங்க்கில் உங்களது ஓடிபி நம்பரை பதிவு செய்யவும் என கூறியிருக்கிறார்.

இதை நம்பிய அன்பரசு, தனது வங்கி ஏடிஎம் கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணை அனுப்பி வைத்திருக்கிறார். சிறிது நேரத்தில், அன்பரசின் வங்கி கணக்கில் இருந்து ₹53.25 லட்சம் பணம் எடுக்கப்பட்டிருப்பதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. இதை பார்த்ததும் அன்பரசு அதிர்ச்சியானார். இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசில் அன்பரசு புகார் அளித்துள்ளார். எனினும், அவரை புகாரை வாங்காமல், இதுகுறித்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கும்படி அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் அண்ணாநகர் துணை ஆணையர் ஜவஹரை சந்தித்து, அன்பரசு புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, தனிப்படை போலீசாரின் விசாரணைக்கு துணை ஆணையர் ஜவஹர் உத்தரவிட்டார்.

தனிப்படை போலீசாரின் விசாரணையில், அன்பரசிடம் எஸ்பிஐ வங்கியிலிருந்து பேசுவதாக கூறிய நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளின் உதவியுடன் மர்ம நபர் பணப் பரிமாற்றம் செய்த வேறொரு வங்கி கணக்கை முடக்கி, அதில் ேபாடப்பட்டு இருந்த அன்பரசின் ₹53.25 லட்சத்தை தனிப்படை மீட்டு தந்தனர். பின்னர் அன்பரசிடம் வங்கியிலிருந்து பேசுவதாக யாரேனும் கூறினால் ஜாக்கிரதையாக இருக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். தனது பணத்தை மீட்க துரித நடவடிக்கை எடுத்த துணை ஆணையர் மற்றும் தனிப்படை போலீசாருக்கு அன்பரசு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

Tags : Rs 53.25 lakh abduction with OTP number: Police took immediate action and recovered
× RELATED போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை...