×

ஒடிசா, மேற்கு வங்கத்தில் யாஸ் புயல் பாதிப்புகளை நாளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

டெல்லி: ஒடிசா, மேற்கு வங்கத்தில் யாஸ் புயல் பாதிப்புகளை பிரதமர் மோடி நாளை பார்வையிடுகிறார். வங்கக் கடலில் திங்கட்கிழமை உருவான ‘யாஸ்’ புயல், அதிதீவிர புயலாக வலுவடைந்து புதன்கிழமை காலை 9 மணிக்கு ஒடிசாவின் பாலசூர் அருகே 50 கிலோ மீட்டர் தொலைவில் கரையை கடக்கத் தொடங்கியது. நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் புயலின் கண் பகுதி, கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 120 முதல் 145 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அப்போது, பலத்த காற்றுடன் ஒடிசாவின் பாலசோர், பத்ராக், ஜகத்சிங்க்பூர் மற்றும் கேந்திரபாரா மாவட்டங்களிலும், மேற்கு வங்கத்தில், தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானாக்கள், திகா, கிழக்கு மெதினிபூர் மற்றும் நந்திகிராம் மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.

இதனால் தாழ்வான பல பகுதிகள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாய் காட்சியளித்தன. நூற்றுக்கணக்கான வீடுகளின் மேற்கூரைகள், சாலையோரம் இருந்த கடைகள் சூறைக் காற்றில் தூக்கி வீசப்பட்டன. ஆங்காங்கே சாலைகளில் மரங்களும் முறிந்து விழுந்தன. ஒடிசாவின் பாரதீப் படகுதுறையில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் சேதமடைந்தன. யாஸ் புயலால் மேற்கண்ட 2 மாநிலங்களிலும் 5 பேர் பலியாகி உள்ளனர். பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன், மேற்குவங்க முதல்வர், மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் கூறுகையில், ‘மேற்கு மெதினிபூர் பகுதியில் தற்காலிக முகாமிலிருந்து வெளியே வந்த ஒருவர், சூறாவளிக் காற்றில் சிக்கி உயிரிழந்தார். புயல் காரணமாக 3 லட்சம் வீடுகள் சேதமடைந்தன.

134 நீர்நிலைகளின் கரைகள் அடித்துச் செல்லப்பட்டன. ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார். ெதாடர்ந்து, ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கூறுகையில், ‘புயலால் பாதிக்கப்பட்ட 128 கிராமங்களுக்கு 7 நாட்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும். அடுத்த 24 மணி நேரத்தில் முக்கிய சாலைகளில் புயலால் சரிந்த மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்படும்’ என்றார். மேற்கவங்கம், ஒடிசா மாநிலங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் விமானப்படையினர் ஆகியோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தீவிர புயலாக இருந்த யாஸ், காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்று மதியத்துடன் வலுவிழக்கிறது. வடக்கு நோக்கி ஜார்க்கண்ட் மாநிலத்தை நோக்கி நகர்வதால் இன்று மாலை வரை அங்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஒடிசா, மேற்கு வங்கத்தில் யாஸ் புயல் பாதிப்புகளை பிரதமர் மோடி நாளை பார்வையிடுகிறார். பாலசோர், பத்ராக், புர்பா மெதினிபூர் பகுதிகளில் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிடுகிறார். மேற்கு வங்கத்திலும் யாஸ் பபுயல் பாதிப்புகளை பார்வையிடுகிறார்.


Tags : Modi ,Yass ,Odisha ,West Bank , Prime Minister Narendra Modi will visit Odisha and West Bengal tomorrow
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...