×

பல்வேறு புகார்கள் எதிரொலி தமிழகம் முழுவதும் 5 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்: லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி வந்த 5 டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றும் பல அதிகாரிகள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றுகின்றனர். அதில் ஒரு சிலர் நேர்மையாக இருந்தாலும், பலர் பல்வேறு துறையின் ஊழல் அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து, கொள்ளையடிப்பதை கண்டும் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் குறிப்பிட்ட அதிகாரிகள் மீது புகார்கள் எழுந்தால், அந்தப் புகாரை நேரடியாக அவர்களிடமே சென்று கொடுக்கும் சம்பவங்களும் நடந்தன.

மேலும் பல அரசியல்வாதிகளுடன் கூட்டுச் சேர்ந்திருப்பதாகவும், பலர் அதிகாரிகளுக்கு போன் செய்து தாங்கள் சொல்கிறவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று மிரட்டுவதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும் அதிமுகவினர் ஆளும் கட்சியாக இருந்தபோது அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி விரிவான விசாரணை நடத்தினார். பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறையை முற்றிலும் மாற்றியமைக்க முடிவு செய்தார்.

ஏற்கனவே இந்த துறையில் டிஐஜியாக இருந்த ராதிகா மாற்றம் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து தற்போது 5 டிஎஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கோவை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியாக இருந்த கணேசன், சென்னை லஞ்ச ஒழிப்பு மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக இருந்த குமரகுருபரன், சென்னை நகர சிறப்பு பிரிவு-IV லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்த வெற்றிச்செழியன், சென்னை நகர சிறப்பு பிரிவு- III லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்த சங்கர சுப்பிரமணியன், தருமபுரி லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்த ராமச்சந்திரன் ஆகிய 5 டிஎஸ்பிக்கள் அதிரடியாக அவர்களின் பணியில் இருந்து விடுவித்து, 5 பேரையும் டிஜிபி அலுவலக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : TN ,Langsa , Various complaints echo 5 DSPs transferred across Tamil Nadu: Anti-Corruption DGP Kandasamy orders
× RELATED பெண்களை அவதூறாக பேசிய யூடியூபர் சங்கரை கண்டித்து ஆர்ப்பாட்டம்