×

ஒடிசா-மேற்கு வங்கம் இடையே கரையை கடந்தது யாஸ் புயலால் 3 லட்சம் வீடுகள் சேதம்: குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது; 4 பேர் பலி

கொல்கத்தா: ஒடிசா - மேற்கு வங்கம் இடையே ‘யாஸ்’ புயல் நேற்று மதியம் கரையை கடந்தது. அப்போது, 155 கி.மீ சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியதால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சுமார் 3 லட்சம் வீடுகள் சேதமடைந்தன. புயலால் 4 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. கிழக்கு மத்திய வங்ககடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 24ம் தேதி புயலாக மாறியது. ‘யாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் நேற்று முன்தினம் காலை தீவிர புயலானது. இந்த புயல் நேற்று காலை ஒடிசா மாநிலம், பாட்ராக் மாவட்டத்தில் உள்ள தாம்ரா துறைமுகம், சந்தபாலி மாவட்டம் இடையே அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதையொட்டி, நேற்று மாலை முதலே ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இதனால், ஒடிசாவில் சுமார் 5.8 லட்சம் பேர், மேற்குவங்கத்தில் 15 லட்சம் பேர், ஆந்திரா உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் ஒரு லட்சம் பேர் 23 லட்சம் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலையில். ஒடிசா மாநிலம் பாரதீப்க்கு வடகிழக்கே 90 கிலோமீட்டர் தொலைவிலும், பாலசோருக்கு தென்கிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்குவங்க மாநிலம் திகாவுக்கு தென்கிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டிருந்தது. காலை 9 மணியளவில் ஒடிசா-மேற்கு வங்கம் கடலோர பகுதியில் தாம்ரா-பாலாசோர் இடையே 130-140 கி.மீ சூறைக்காற்றுடன் தாக்க தொடங்கியது. புயல் கரையை கடக்க தொடங்கியதும் சூறைக்காற்றின் வேகம் அதிகமாகி 155 கி.மீ வேகத்தில் வீசியது.

மதியம் 1.30 மணி அளவில் முழுமையாக புயல் கரையை கடந்தது. புயல் தாக்கியதில் பாட்ராக் மற்றும் பாலாசோர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்தாலும், கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது, இன்று வரை மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் மெதுவாக கடந்து நள்ளிரவு ஜார்க்கண்ட்டுக்கு சென்றது. புயல் காரணமாக அதிகபட்சமாக பாட்ராக் மாவட்டத்தில் 27.3 செ.மீ மழை பதிவாகி உள்ளது. பாரதீப்பில் 19.7 செ.மீ, பாலாசோர் 5.1 செ.மீ, புவனேஸ்வரில் 4.9 செ.மீ, கொல்கத்தாவில் 2.24 செ.மீ, திகா 5.5 செ.மீ, டைமண்ட் துறைமுகம் 3.3 செ.மீ மழை பதிவாகி இருந்தது.

புயல் தாக்கியதில் ஒடிசாவில் மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து மின்தடை ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் புயலால் 3 பேர்  பலியாகினர். ஆனால், மேற்கு வங்கத்தை ‘யாஸ்’ புயல் புரட்டி போட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் மிதப்பதால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடற்கரை ஒட்டி உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் கடல்நீர் புகுந்துள்ளது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. புர்பா மிட்னாபூர், வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், பா மாவட்டங்கள், பாஸ்சிம் மிட்னாபூர், ஹவுரா, ஹூக்ளி, புருலியா, நெய்டா ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் மீட்பு குழு ஆகியோர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். திகா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், மீட்பு பணிக்கு ராணுவ வரவழைக்கப்பட்டுள்ளது.
 
சாகர், கோசபா, தெற்கு 24 பர்கானாஸ், திகா, சங்கர்பூர், மண்டாராமணி ஆகிய பகுதிகளில் கடல் புகுந்ததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கனமழையால் மரங்கள் சாய்ந்தன. கார்கள் மிதந்தது. திகா பகுதிகளில் சிக்கி தவித்த 32 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அங்கு கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் பலியாகி உள்ளார். சூறாவளி காற்றின் தீவிரத்தால், கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து நேற்று  காலை 8.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை புறப்பட இருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. பாதுகாப்பு கருதி கொல்கத்தாவில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் மூடப்பட்டன. கனமழையால் ஆறு மற்றும் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

புயல் கரையை கடந்த மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடப்பதையொட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை செயலகத்தில் இருந்த விடிய விடிய நிலைமையை கண்காணித்தார். புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் 3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 கோடி பேர் பாதிப்பு
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ‘‘‘யாஸ்’ புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளது. மேற்கு வங்கத்தை கடுமையான பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். 15 லட்சத்து 4,506 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சம் 72 மணி நேரத்திற்கு பிறகுதான் முழுமையாக பாதிப்பு குறித்து தெரியவரும். ₹10 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : Yass storm ,Odysa- ,West Bank , Crossed the border between Odisha and West Bengal 3 lakh houses damaged by Yas storm: flats flooded; 4 killed
× RELATED இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி...