×

உத்தரப்பிரதேசத்தில் 20 பேருக்கு முதல் டோஸ் கோவிஷீல்டு அடுத்த டோஸ் கோவாக்சின்: தடுப்பூசி போடுவதில் கவனக்குறைவு

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் 20 பேருக்கு முதல் டோஸ் கோவிஷீல்டு, 2வது டோஸ் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டு கொண்டனர். 2வது டோஸ் போடுவதற்கு மே 14ம் தேதி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 20 பேர் சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்தவர்கள் முதல் டோஸ் குறித்து எந்த விவரத்தையும் கேட்காமல் அனைவருக்கும்  2வது டோசுக்கு கோவாக்சின் தடுப்பூசியை போட்டுள்ளார்.

இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் டோஸ் என்ன தடுப்பூசி போடுகிறோமோ, அதே தடுப்பூசியைதான் போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு, தடுப்பூசி போட்ட தேதி எழுதி அனைவருக்கும் சான்று கொடுக்கப்படுகிறது. ஆனால், தடுப்பூசி மாற்றி போடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தடுப்பூசி போட்ட அனைவருக்கும் எந்தவித உடல்நிலை பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சித்தார்த்நகர் தலைமை மருத்துவ அதிகாரி சந்தீப் சவுத்ரி கூறுகையில், ‘‘தடுப்பூசி மாற்றி போடப்பட்டது முழுக்க முழுக்க கவனக்குறைவுதான். இதற்கு காரணமானவர்களிடம் இருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இந்த தவறுக்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை நாங்கள் கண்டிப்பாக செய்வோம்’’ என்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ராம் சுரத் கூறுகையில், ‘‘தடுப்பூசி மாற்றி போட்டதில் இருந்து நான் பயத்தில் இருக்கேன்.2வது டோஸ் போடும் போது யாருமே எதையும் விசாரிக்கவில்லை. இதனால், எனக்கு கோவிஷீல்டு போடுவதற்கு பதிலாக கோவாக்சின் போடப்பட்டது’’ என்றார். நாட்டிலேயே உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் குறைந்த அளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 23 கோடி மக்கள் தொகை உள்ள உ.பியில் 1.8% பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Uttar Pradesh , Cow Shield first dose for 20 people in Uttar Pradesh Next dose Kovacsin: carelessness in vaccination
× RELATED உ.பி.யில் திருமண ஊர்வலத்திற்காக காரை...