ஹூப்பள்ளி ரயில்வே சரகத்தில் மக்கள் உதவிக்காக 25 ஜம்போ ஆக்சிஜன் டேங்கர்களை வழங்கிய நடிகர் சோனு சூட்: குவியும் பாராட்டுகள்

பெங்களூரு: வட கர்நாடக மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் நடிகர் சோனுசூட் 25  ஜம்போ சிலிண்டர்களை ஹூப்பள்ளி ரயில்வே சரகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு  வழங்கியுள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு திரைப்படங்களில்  வில்லன் நடிகராக வலம் வருபவர் சோனு சூட். இவர் கடந்த கொரோனா ஊரடங்கின்  போது  பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள கிராமங்கள் மற்றும் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன் வந்துள்ளார். பல்வேறு  இடங்களில் இவரின் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன்  டேங்கர்கள் நிறுவப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான இலவச  உணவுகளையும் இவர் தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வட  கர்நாடக மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன் வந்துள்ளார். இது தொடர்பாக  ரயில்வே ஏ.டி.ஜி.பி பாஸ்கர்ராவை சந்தித்த அவர் ஹூப்பள்ளி பகுதி மக்கள்  பயன்பெறும் நோக்கில் இலவச ஆக்சிஜன் சேவை செய்ய இருப்பதாக கூறினார். இதற்கு  ஏ.டி.ஜி.பி பாஸ்கர் ராவ் வரவேற்பு தெரிவித்தார். இதையடுத்து நேற்று  ஹூப்பள்ளி ரயில்வே சரகத்திற்குட்பட்ட மைதானத்தில் ஆக்சிஜன் மையங்கள்  அமைக்கப்பட்டது. முதற்கட்டமாக 25 ஜம்போ ஆக்சிஜன் டேங்கர்கள்  வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர மேலும் எவ்வளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள்  தேவைப்படுகிறதோ, அதற்கு ஏற்பாடு செய்து கொடுப்பதாக சோனு சூட்  தெரிவித்துள்ளார். இந்த ஆக்சிஜன் மையத்தில் சிகிச்சை பெற  விரும்புவர்கள் சோனு சூட் அறக்கட்டளை அல்லது ஹூப்பள்ளி ரயில்வே போலீசாரை  தொடர்பு கொண்டால் போதும், அவர்கள் உடனே தேவையான நடவடிக்கை மேற்கொள்வார்கள். குறிப்பாக ரயில்வே போலீசார் மட்டுமின்றி ஹூப்பள்ளியை சேர்ந்த ஏழை எளிய  மக்களுக்கும் இது உதவி கரமாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை  தெரிவித்துள்ளார். குறிப்பாக யாரும் ஆக்சிஜன் கிடைக்காமல்  இறந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த உதவிகரம் நீட்டியிருப்பதாக அவர்  தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>