×

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்கனி விற்பனையாளர்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம்: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் தள்ளு வண்டிகள் மூலம் காய்கனிகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் நடமாடும் வாகனங்களின் மூலம் 3,790 மெட்ரிக் டன் காய்கறிகள், 1,220 மெட்ரிக் டன் பழங்கள் மற்றும் 31 மெட்ரிக் டன் பூக்கள் கோயம்பேடு வணிக வளாகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த நடமாடும் காய்கனி விற்பனையில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவிக்க சென்னை மாநகராட்சி தலைமையிடத்தில் 9499932899 என்ற கைபேசி எண் மற்றும் 5 இணைப்புகளுடன் கூடிய 044-4568 0200 என்ற எண்ணுடன் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் கட்டுபாட்டு அறைக்கு 315 அழைப்புகள் பெறப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் தள்ளு வண்டிகள் மூலம் காய்கனிகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் குறித்த விவரங்கள் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

www.chennaicorporation.gov.in
என்ற இணையதளத்தில், கோவிட்-19  எனும் இடத்தில் உள்ளீடு செய்தால் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் பெயர், அலைபேசி எண், வாகன எண் மற்றும் விற்பனை செய்யும் இடம் அல்லது வார்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம். இதன்மூலம் பொதுமக்கள் தங்களுடைய பகுதியில் உள்ள வியாபாரிகளின் தொடர்பு எண்களில் தொடர்பு கொண்டு காய்கனிகளை பெற்று பயனடையலாம். இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி எண்கள் அறிவிப்பு: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அறிக்கை:
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18004250111  என்ற  உதவி எண் மற்றும் 9700799993 என்ற காணொலி உதவி எண்களின் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். இந்த உதவி எண்கள் மூலம் பதிவு செய்யப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையில் தற்காலிக தடுப்பூசி  முகாம்கள் ஏற்படுத்தப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் என கண்டறியப்பட்ட நபர்களுக்கு அவர்களின் வீடு அல்லது மிக அருகாமையில் சென்று தடுப்பூசி செலுத்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உதவி  எண்களின் வாயிலாக 169 பேர் பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.  சிறப்பு முகாம் தொடங்கப்பட்ட நாள் முதல் கடந்த 25ம் தேதி வரை 118 மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  இதில் 90 பேருக்கு சிறப்பு முகாம்கள் மூலமாகவும், 28 பேருக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Kagandeep Singh Bedi , Vegetable Vendors, Corporation Commissioner, Kagandeep Singh Bedi
× RELATED பல்வேறு முறைகேடுகள், கொரோனாவை...