×

ஆன்லைன் வகுப்பில் முறையற்ற வகையில் நடந்தால் ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு

சென்னை: இணைய வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று  காரணமாக தமிழகம் மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக கடந்த ஓராண்டாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியும், அரை நிர்வாணமாக போஸ் கொடுத்தும் ஆசிரியர் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டதாக மாணவிகள் புகார் செய்தனர்.

இந்த புகாரைத் தொடர்ந்து, சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளாகவே ஆசிரியர் ராஜகோபாலன் இந்த அசிங்கமான செயல்களை செய்து வந்துள்ளார். நிர்வாகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால்தான் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர் மீது பல புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன. அதோடு நிற்காமல் மேலும் பல பள்ளிகள் மீதும் அதிரடி புகார்கள் வரத் தொடங்கி உள்ளது. இதனால், ஆன்லைனில் பாடம் எடுக்கும் முறை கேள்விக்குறியாகியுள்ளது. பெற்றோர்கள் மத்தியிலும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, பெற்றோர்களின் அச்சத்தை போக்கவும், ஆன்லைன் வகுப்பில் தவறுகள் நடக்காத வண்ணம் தடுப்பது, தவறுகள் நடக்கும் பட்சத்தில் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், உயர் கல்வித்துறைச் செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காக்கர்லா உஷா, டிஜிபி திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், சமீபத்தில் இணைய வகுப்பு ஒன்றில் நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்தும், அதன் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும் முதல்வர் ஆய்வு செய்தார். அப்போது, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக் கூடாது என்றும் சட்டப் பூர்வமான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுப்பது, பள்ளிகள், கல்லூரிகளில் இதுபோன்ற  நிகழ்வுகள் நடக்காமல் இருக்க சில முக்கிய முடிவுகள் எடுப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அறிவித்துள்ளார். அது வருமாறு:

* ஆன்லைன் வகுப்புகள் அந்தந்த பள்ளியினால் பதிவு (ரெக்கார்டு) செய்யப்பட வேண்டும். இந்த பதிவு சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இருவரைக் கொண்ட குழுவால் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட வேண்டும்.
* ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது தொடர்பாக முறையான வழிகாட்டுதல்களை வகுத்து வெளியிட  பள்ளிக் கல்வித்துறை ஆணையர், பள்ளிக் கல்வி இயக்குநர், கணினி குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான காவல் அலுவலர்கள், கல்வியாளர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். அந்த குழு மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லைகள் தரப்படுவதை தடுப்பதற்கு உரிய  வழிமுறைகளை பரிந்துரைக்கவும், ஆன்லைன்  வகுப்புகளை நெறிப்படுத்துவது குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளை ஒரு வார காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

* ஆன்லைன் வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது ‘‘போக்சோ’’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவியர் தங்கள் புகார்களை தெரிவிக்க ஹெல்ப் லைன் எண் உருவாக்க வேண்டும்.
* ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வரும் புகார்களை மாநிலத்தின் கணினி குற்றத் தடுப்புக் காவல் பிரிவில் காவல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர் உடனடியாக பெற்று சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

* ஆன்லைன் வகுப்புகள் அந்தந்த பள்ளியினால் பதிவு (ரெக்கார்டு) செய்யப்பட வேண்டும்.
* மாணவ, மாணவியர் தங்கள் புகார்களை தெரிவிக்க ஹெல்ப் லைன் எண்  உருவாக்க வேண்டும்.
* ஆன்லைன் வகுப்புகளை நெறிப்படுத்துவது குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளை ஒரு வார காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


Tags : MK Stalin , If the online class behaves improperly Teachers arrested under Pokcho Act: Chief MK Stalin's action order
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...