×

ஊரடங்கால் பலமுறை திருமணம் ஒத்திவைப்பு: 24 கி.மீ சைக்கிளில் சென்று தாலிகட்டிய மணமகன்..! விருதுக்கு பரிந்துரைத்த பீகார் அதிகாரிகள்

பாகல்பூர்: பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் உச்சககானில் வசிக்கும் கவுதம் குமார் என்பவருக்கும், பாங்கா மாவட்டம் பாரத்சிலா கிராமத்தில் வசிக்கும் கும்குமுமாரி என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே, கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது பீகாரில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கியதால், ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. அதனால், திருமணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மணமகன் கவுதம் குமார், திருமண உடையணிந்து, மணமகளின் சொந்த ஊரான பாரத்சிலா கிராமத்திற்கு 24 கி.மீ தூரம் சைக்கிளில் சென்றார். மணமகனை, மணமகள் குடும்பத்தினர் பாரம்பரிய சடங்குகளுடன் வரவேற்றனர்.

அதேநாளில் விருந்தினர்கள், கொண்டாட்டங்கள், திருமண ஊர்வலம் ஏதுமின்றி எளிய முறையில் திருமணம் நடந்தது. இந்த தகவல் அறிந்த ஷம்புகஞ்ச் வட்டார அலுவலர் பிரபாத் ரஞ்சன், மணமக்களை நேரில் வந்து ஆசீர்வதித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இரண்டாவது அலையால் பீகாரில் ஊரடங்கு கடுமையாக உள்ளது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒத்திவைக்குமாறும், கூட்டமாக மக்கள் செல்வதைத் தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. மணமகன் கவுதமின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. மற்றவர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாத வகையில் கவுதம் திருமணம் செய்து கொண்டார். புதிதாக திருமணமான தம்பதியினருக்கு மாவட்ட கலெக்டருடன் பேசி விருது வழங்க ஏற்பாடு செய்யப்படும்’ என்றார்.

Tags : Uradangal ,Bihar , Postponement of marriage several times in Uratangal: The bridegroom who went on a 24 km bicycle and beat her ..! Bihar officials nominated for the award
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!