×

2வது ஒருநாள் போட்டியிலும் அபார வெற்றி: இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றி வங்கதேசம் புதிய சாதனை

டாக்கா: இலங்கை கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் 33 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி நேற்று டாக்காவில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 48.1 ஓவரில் 246 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஒருநாள் போட்டிகளில் நேற்று 8வது சதத்தை அடித்த விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 125 ரன்கள் (127 பந்து, 10 பவுண்டரி) எடுத்தார்.  பின்னர் களம் இறங்கிய இலங்கை 38 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியதும், ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி 40 ஓவரில் 245 ரன் இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் இலங்கை அணி 40 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களே எடுத்தது. இதனால் வங்கதேசம் 103 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை தரப்பில் குணதிலகா அதிகபட்சமாக 24 ரன் எடுத்தார். வங்கதேச பந்துவீச்சில், முஸ்தாபிகூர் ரஹ்மான், ஹசன் மீராஜ் தலா 3 விக்கெட் எடுத்தனர். சதம்அடித்த முஷ்பிகுர் ரஹிம் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் 2-0 என வங்கதேசம் தொடரை கைப்பற்றியது. வரலாற்றில் முதன் முறையாக இலங்கைக்கு எதிராக போட்டி தொடர் ஒன்றை வங்கதேசம் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இலங்கை அணி கேப்டனை மாற்றியும் பரிதாப தோல்வி தொடர்கிறது. 3வது மற்றும் கடைசி ஆட்டம் இதே மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

Tags : Bangladesh ,Sri Lanka , Great win in 2nd ODI too: Bangladesh set a new record by capturing the series against Sri Lanka
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...