×

ஆன்லைன் வகுப்பின்போது அரை நிர்வாணத்துடன் பாடம் நடத்திய விவகாரம்: 100க்கும் மேற்பட்ட மாணவிகளை மிரட்டி ஆபாச படங்களை பெற்றது அம்பலம்

* பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்  பரபரப்பு வாக்குமூலம்
* 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு

சென்னை: பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்து வரும் 100க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் கடந்த 5 ஆண்டுகளாக ஆபாச மெசேஜ் அனுப்பி அதன் மூலம் மிரட்டி, அவர்களின் ஆபாச படங்களை பெற்றதாகவும், அந்த படங்களை உடன் பணியாற்றும் 3 சக ஆசிரியர்களுக்கும் பகிர்ந்து ரசித்ததாகவும் கைது செய்யப்பட்ட பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து ராஜகோபாலனை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். சென்னை கே.ேக.நகரில் பத்மா சேஷாத்திரி சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது. இதன் தாளாளராக ஷீலா ராஜேந்திரன் உள்ளார். பிரபலமான பள்ளி என்பதால் சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் பிள்ளைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் ராஜகோபாலன் என்பவர் கணக்கு பதிவியல் மற்றும் வணிகவியல் துறையின் ஆசிரியராக கடந்த 20 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஆண்டு முதல் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. ஆசிரியர்களும் வீடுகளில் இருந்தே அவரவர் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஆசிரியர் ராஜகோபாலன் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு பதிவியல் பாடங்களை ஆன்லைன் வகுப்பு நடத்தி வந்தார். இவர் ஆன்லைன் வகுப்பின்போது அரை நிர்வாணமாக துண்டு மட்டும் அணிந்து, மாணவிகளுக்கு பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் பாடம் நடத்தி வந்துள்ளார். ஆன்லைன் வகுப்பு முடிந்த பிறகு இரவு நேரத்தில் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளின் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் செய்வதும், செய்முறை தேர்வின் போது மதிப்பெண்களை குறைத்து விடுவதாகவும் மிரட்டி மாணவிகளிடம் ஆபாசமாக படங்களை பெற்று வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் ஆசிரியர் ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளனர். ஆனால், பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ைல. இதையடுத்து பள்ளி மாணவிகளே டிவிட்டர் பக்கத்தில் ஆசிரியர் ஆன்லைன் வகுப்பின் போது அரை நிர்வாணத்துடன் பாடம் எடுக்கும் புகைப்படத்தை பதிவு செய்தனர். இதையடுத்து முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆசிரியரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாகம் மற்றும்  ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து ஆசிரியர் ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட பத்மா சேஷாத்திரி பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நியைத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பி. ஜெயலட்சுமி நேரடியாக பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாகிகள் மற்றும் புகாருக்கு உள்ளான ஆசிரியர் ராஜகோபாலனிடம் விசாரணை நடத்தினார். அப்போது ஆசிரியர் பயன்படுத்திய செல்போன், லேப்டாப்பை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையை தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலனை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததும் உறுதியானது.

அதைதொடர்ந்து நங்கநல்லூர் இந்து காலனி 7வது தெருவை சேர்ந்த பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் 12 போக்சோ ஆக்ட் 2012. 11(i)(ii)(iii)(iv) மற்றும் 354(ஏ), 509, 67,67 (எ)ஐடி ஆக்ட்  ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக நேற்று காலை கைது செய்தனர். பின்னர்  ஆசிரியர் ராஜகோபாலனை மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வரும் ஜூன் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளனர். அதேநேரம், அவரது லேப்டாப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளின் ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால் ஆசிரியர் ராஜகோபாலனை போலீசார் 5 நாள் காவலில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் ராஜகோபாலன் விசாரணையின் போது அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: ‘‘பத்மா சேஷாத்திரி பள்ளியில் வணிகவியல் துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். இவரது பணிக்காலத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு சக ஆசிரியர்களிடம் கூறி செய்முறை தேர்வு மதிப்பெண்கள் முழுமையாக பெற்று தருவதாக கூறி மாணவிகளை தன் வசப்படுத்தியுள்ளார். அதன் மூலம் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது பிடிக்காத மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் ஆசிரியருக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளனர். இதை  ஆசிரியர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி மாணவிகள் மீது பாலியல் தொந்தரவை மீண்டும் தொடர்ந்துள்ளார். அந்த வகையில்,  ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த 5 ஆண்டுகளாக குறிப்பாக 11 மற்றும் 12ம் வகுப்பு படித்து வந்த 100க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் தவறான நோக்கத்தில் பழகி வந்துள்ளார்.

அப்போது ஆசிரியரின் ஆசைவார்த்தைக்கு மயங்கிய மாணவிகளின் செல்போன் எண்களை அவர்களிடமே வாங்கி இரவு நேரங்களில் மெசேஜ் செய்து அவர்களுக்கு பாலுணர்வுகளை தூண்டி ஆபாச படங்களை பெற்று ரசித்து வந்துள்ளார். அப்படி பெறப்பட்ட மாணவிகளின் ஆபாச படங்களை ஆசிரியர் தனது செல்போனில் இருந்து லேப்டாப்பில் பதிவு செய்து வைத்திருந்தார். பெற்றோருக்கு தெரியாமல் சில மாணவிகளை ஆசிரியர் சினிமா மற்றும் ஓட்டல்களுக்கு அழைத்து சென்று வந்துள்ளார். அதற்கான புகைப்படங்களும் அவர் வைத்திருந்தார். அதோடு இல்லாமல் சக நண்பர்களாக அதே பள்ளியில் பணியாற்றி வரும் 3 ஆசிரியர்களுக்கு மாணவிகளின் ஆபாச படங்களை பகிர்ந்து வந்துள்ளார். அவர்களும் சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் அந்த ஆபாச படத்தை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.

ஆன்லைன் வகுப்பிற்கு பிறகு மாணவிகளை நேரடியாக பார்க்க முடியாததால் ஆசிரியர், மாணவிகளின் வாட்ஸ் அப் எண்ணில் வீடியோ காலில் தொடர்பு  கொண்டு தவறான நோக்கத்தில் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் பேசி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், ஆசிரியர் ராஜகோபாலன் அளித்த தகவலின்படி அவரது செல்போன் மற்றும் லேப்டாப்புகளை ஆய்வு செய்த போது, லேப்டாப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளின் ஆபாச படங்களை வைத்திருந்ததும், கடந்த 5 ஆண்டுகளாக மாணவிகளை மிரட்டி ஆபாச படங்களை வாங்கி சேகரித்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அதில் பெரும்பாலான மாணவிகள் சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் பிள்ளைகள் என தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் வசதியானவர்கள் என்பதால் அவர்கள் ஆசிரியரின் நடவடிக்கை குறித்து தங்களது பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்துள்ளனர். இதை ஆசிரியர் ராஜகோபாலன் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளார். தன்னுடன் இந்த செயலுக்கு ஆதரவாக இருந்த 3 ஆசிரியர்களுக்கும் தொடர்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.” இவ்வாறு ஆசிரியர் ராஜகோபாலன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சிஎம்டிஏ அனுமதி பெறாத பள்ளி கட்டிடங்கள்
தி.நகர் பார்த்தசாரதிபுரம் திருமலைப்பிள்ளை சாலையில் பத்மா சேஷாத்திரி பாலபவன் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அனைத்தும் அரசு விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை உறுதி செய்யும் வகையில் மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரி இருந்தார். அதில் தி.நகரில் உள்ள பள்ளி கட்டிடம் சிஎம்டிஏ அனுமதி இல்லாமல் முழுமையாக சட்டத்திற்கு எதிராக கட்டப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடத்தை அகற்ற கோரியும், பத்மா சேஷாத்திரி பாலபவன் பள்ளி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர் மீது புகார்களை குவிக்கும் மாணவிகள்
பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கைது ெசய்யப்பட்டுள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாதிக்கப்பட்ட முன்னாள் மற்றும் தற்போது படித்து வரும் மாணவிகள் புகார் அளிக்க விரும்பினால் ஆன்லைன் மூலமும் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஜெயலட்சுமியின் 94447 72222 வாட்ஸ்அப் எண்ணிற்கும் புகார் அளிக்கலாம், அப்படி புகார் அளிக்கும் மாணவிகள் குறித்தும்  அனைத்து விவரங்களும் ரகசியமாக பாதுகாக்கப்படும்  என்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் அறிவித்திருந்தனர். அதைதொடர்ந்து வாட்ஸ்அப் எண்ணிற்கு மட்டும் நேற்று வரை 28 புகார்கள் வந்துள்ளன. அதில், சென்னை முழுவதிலும் இருந்து முன்னாள் மாணவிகள் 10 புகார்களும், தற்போது பள்ளியில் படித்து வரும் 3 மாணவிகள், தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள முன்னாள் மாணவிகள் என 15 பேர் புகார் அளித்துள்ளனர்.  இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பலர் ஆன்லைன் மற்றும் வாட்ஸ்அப் எண் மூலம்  ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார் அளித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பள்ளி தாளாளர், முதல்வரிடம் துணை கமிஷனர் 3 மணி நேரம் விசாரணை
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பாக பத்மா சேஷாத்திரி பள்ளியின் தாளாளர் ஷீலா ராஜேந்திரன், பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜனுக்கு போலீசார் நேற்று முன்தினம் நேரில் ஆஜராகி விளக்கும் அளிக்கும்படி சம்மன் அனுப்பினர். அந்த சம்மன் அடிப்படையில் நேற்று அசோக் நகர் காவல் நிலையத்தில் தி.நகர் துணை கமிஷனர் அரிகிரன் பிரசாத் மற்றும் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முன்பு பத்மா சேஷாத்திரி பள்ளி தாளார் ஷீலா ராஜேந்திரன், கீதா கோவிந்தராஜன் நேரில் ஆஜராகினர். இருவரிடமும் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, காவல் துறை சார்பில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தார்களா, புகாரின்படி ஏன் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. பாதிக்கப்பட்ட மாணவிகள் டிவிட்டரில் பதிவு செய்துள்ளனர். அதை ஏன் பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வில்லை. பள்ளியில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஏன் கண்காணிப்பு குழு அமைக்க வில்லை என்று நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டப்பட்டது. அதற்கு இருவரும் அளித்த பதிலை போலீசார் வீடியோ மற்றும் எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்தனர். அப்போது இருவரும், கடந்த காலங்களில் இதுபோன்ற பாலியல் புகார்கள் தங்களுக்கு வரவில்லை. ஆசிரியர் ராஜகோபாலன் நடத்தும் ஆன்லைன் வகுப்பில் 100 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக இருவரும் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Tags : More than 100 students intimidated into receiving pornography
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...