×

ஆன்டிகுவாவில் இருந்து மாயமானதால் பரபரப்பு: மெகுல் சோக்சியை காணவில்லை: கியூபாவில் தஞ்சமடைந்ததாக தகவல்

புதுடெல்லி: வங்கி கடன் மோசடியில் இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான மெகுல் சோக்சி ஆன்டிகுவாவில் இருந்து காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் அங்கிருந்து வெளியேறி கியூபாவில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி இருவரும் இணைந்து மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரிக்கிறது. நீரவ் மோடி, மெகுல் சோக்சி இருவரும் வெளிநாடு தப்பி உள்ளனர். நீரவ் மோடி இங்கிலாந்தில் தஞ்சமடைந்த நிலையில், மெகுல் சோக்சி  கரீபியன் தீவுகளில் ஒன்றான ஆன்டிகுவாவில் தஞ்சமடைந்தார். இதனால் இருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆன்டிகுவா குடியுரிமையை வைத்துள்ள மெகுல் அங்கு கடந்த 2018 முதல் பதுங்கி உள்ளார்.

அவரை நாடு கடத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சிக்கிறது. சட்ட நடவடிக்கைகள் முடிந்ததும் மெகுல் சோக்சியின் ஆன்டிகுவா குடியுரிமை பறிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் கஸ்டன் பிரவுன் கடந்த ஆண்டு உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், ஆன்டிகுவா மற்றும் பர்படாஸ் தீவுகளில் இருந்து மெகுல் சோக்சியை காணவில்லை என அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.  ஆன்டிகுவா போலீசாரும் அதை உறுதிப்படுத்தி உள்ளனர். நேற்று முன்தினம் ஓட்டல் ஒன்றுக்கு காரில் சென்ற மெகுல் சோக்சி அதன்பின் எங்கு போனார் என தெரியவில்லை என போலீசார் கூறுகின்றனர். அவரை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனால் மெகுல் சோக்சியின் குடும்பத்தினர் கவலை அடைந்திருப்பதாக அவரது வக்கீல் கூறி உள்ளார். இதற்கிடையே, ஆன்டிகுவா உள்ளூர் மீடியா உளவுத்தகவல்கள் கூறுகையில், ‘‘மெகுல் சோக்சி கியூபாவுக்கு தப்பி உள்ளார். அங்கு அவர் தஞ்சமடைந்துள்ளதாக சில தகவல்கள் கிடைத்துள்ளன’’ என கூறி உள்ளன. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கியூபாவும் புகலிடம்
ஆன்டிகுவா, கியூபா இரு நாடுகளுமே இந்தியாவுடன் நாடு கடத்தல் ஒப்பந்தம் செய்யாத நாடுகளாகும். எனவே, குற்ற வழக்கில் சிக்கியவர்கள் அந்நாடுகளில் பதுங்கினால் அவர்களை இந்தியா கொண்டு வருவது சிக்கலான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Antigua ,Meghal Choksi ,Cuba , Missing from Antigua: Meghal Choksi missing: Asylum seeker in Cuba
× RELATED வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்