×

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பயன்படுத்திய கொரோனா மருந்து அறிமுகம்: விலை 59,750

புதுடெல்லி: அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட போது அவர் பயன்படுத்திய ஆன்டிபாடி காக்டெயில் மருந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.59,750 ஆகும்.
கொரோனா வைரசுக்கு எதிராக, நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டிபாடி காக்டெயில் மருந்தை ரோச் இந்தியா மருந்து நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ‘கேஸிர்விர்மாப்’, ‘இம்டெவிமாப்’ ஆகிய இரு மருந்துகளை ஒன்றாக கலந்து ஆன்டிபாடி காக்டெயில் மருந்தை அவசர கால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த 10ம் தேதி அனுமதி தந்திருந்தது.  அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தபோது அவருக்கு இந்த ஆன்டிபாடி காக்டெயில் மருந்துதான் செலுத்தப்பட்டது.

இந்த மருந்தை இந்தியாவில் சிப்லா மருந்து நிறுவனம் விற்பனை செய்கிறது. இதுகுறித்து ரோச் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஆன்டிபாடி காக்டெயில் மருந்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளோம். இரு மருந்துகள் கொண்ட பாக்கெட்டின் அதிகபட்ச விலையாக ரூ.1,19,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை இரு நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியும். இதன் மூலம் ஒரு டோஸ் மருந்தின் விலை ரூ.59,570 ஆகும். ஒரு லட்சம் டோஸ் மருந்துகள் வாங்கினால், 2 லட்சம் நோயாளிகளுக்குப் பயன்படுத்த முடியும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்டிபாடி காக்டெயில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து கொரோனாவில் லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகள்  அதாவது 12 வயதுக்கு உட்பட்டவர்கள், வயதில் மூத்தவர்கள் , உடல் எடை 40 கிலோவுக்குக் குறைவாக இருப்போருக்கும் செலுத்தலாம்.

இந்தப் பிரிவினர் கொரோனா உறுதி செய்யப்பட்டபின்,  அதிகமான பாதிப்புக்கு உள்ளாவார்கள் என மருத்துவர்கள் கணிக்கும் பட்சத்தில் இந்த மருந்தைச் செலுத்தலாம். இந்த மருந்தின் மூலம் குழந்தைகள், முதியோரைப் காக்க முடியும், உயிரிழப்பை 70 சதவீதம் தடுக்க முடியும் என கூறப்பட்டு உள்ளது.



Tags : U.S. ,Trump , Introduction of Corona drug used by former US President Trump: Price 59,750
× RELATED மீனம்பாக்கம் விமான நிலையத்தில்...