பாம்பனில் 2ம் எண் புயல் கூண்டு: ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் 3ம் நாளாக கடல் சீற்றம்

ராமேஸ்வரம்: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘யாஷ்’ புயலாக மாறிய நிலையில் ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் தனுஷ்கோடி கடல் பகுதிகளில் 3ம் நாளாக இன்று காலையிலும் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்பட்டது. பாம்பன் துறைமுகத்தில் நேற்று மதியம் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில் இன்றும் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.

வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு வலுவடைந்து ‘யாஷ்’ புயலாக உருவெடுத்தது.

இப்புயல் அந்தமான் போர்ட்பிளேர் துறைமுகத்தில் இருந்து வடக்கு மற்றும் வடமேற்கில் 620 கி.மீ தூரத்திலும், ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்தில் இருந்து தெற்கு மற்றும் தென்கிழக்கே 530 கி.மீ தூரத்திலும், பாலசோர் துறைமுகத்தில் இருந்து தெற்கு மற்றும் தென்கிழக்கே 630 கி.மீ தூரத்திலும், மேற்குவங்கம் டிகா துறைமுகத்தில் இருந்து தெற்கு மற்றும் தென்கிழக்கே 620 கி.மீ தூரத்திலும் கடலில் நிலை கொண்டுள்ளது. யாஷ் புயல் மேலும் வலுப்பெற்று ஒடிசா மற்றும் மேற்குவங்கம் இடையே நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் வலுவடைந்து வருவதால் நேற்று பிற்பகல் 2.20 மணியளவில் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

இதனிடையே 3ம் நாளாக இன்று காலையிலும் ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பலத்த காற்று வீசியது. ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. கடல் சீற்றத்தால் தனுஷ்கோடி தென் கடல் பகுதியில் நேற்று 2 கிமீ தொலைவு வரை கரையோரத்தில் அரிப்பு ஏற்பட்டது. பலத்த காற்று வீசி வருவதாலும், கடல் மிகவும் சீற்றமாக காணப்படுவதாலும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்லவில்லை.

Related Stories:

More
>