×

மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி விற்பனை செய்ய மாடர்னா, பைசர் நிறுவனங்கள் மறுப்பு: மத்திய அரசு பேச்சுவார்த்தை

டெல்லி: மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி விற்பனை செய்ய மாடர்னா, பைசர் நிறுவனங்கள் மறுத்துவிட்ட நிலையில் அந்நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தடுப்பூசி தேவைப்படும் மாநிலங்கள் அதனை மருந்து நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக இறக்குமதி செய்ய மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. ஆனால் அவ்வாறு தொடர்புகொண்ட பஞ்சாப் மற்றும் டெல்லி மாநிலங்களுக்கு தடுப்பூசி விற்பனை செய்ய மாடர்னா, பைசர் ஆகிய நிறுவனங்கள் மறுத்துவிட்டன.

இந்தியாவின் மைய அரசு மட்டுமே தடுப்பூசி கொள்முதல் குறித்து நேரடியாக தங்களை தொடர்பு கொள்ள முடியும் என்று அறிக்கையில் கூறிவிட்டனர். இதையடுத்து மத்திய அரசு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்து விநியோகிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் கோரியுள்ளன.

இந்நிலையில் தடுப்பூசி இறக்குமதி குறித்து உலகளாவிய நிறுவனங்களுடன் பேசி வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் போதிய அளவிற்கு தடுப்பூசிகள் இருப்பில் இல்லை என்று பைசர், மாடர்னா நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் கூறியுள்ளார்.

தடுப்பூசி தயாரிப்பு பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு போதிய அளவு இருப்பு அதிகரித்ததும் இந்திய அரசை தொடர்பு கொள்வதாக பைசர், மாடர்னா நிறுவனங்கள் உறுதி அளித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில் ஸ்புட்னிக் V தடுப்பூசி விநியோகம் குறித்து இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகள் தங்களை தொடர்பு கொண்டுள்ளதாக கூறியுள்ள ரஷ்யா கோரிக்கைகளை பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது.



Tags : Pfizer , vaccine
× RELATED கொரோனா தடுப்பூசிக்கு கடும்...