×

இந்தியாவில் மாநில அரசுகளுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியா?.. கோரிக்கைகளை பரிசீலித்து வருவதாக ரஷ்யா தகவல்

டெல்லி: ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் மாநில அரசுகளுக்கு விநியோகிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக ரஷ்ய துணை தூதர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பாரத் பயோடெக்கின் கோவாக்சின், மற்றும் சீரம் நிறுவனத்தின்  கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி  தரப்பட்டுள்ள போதிலும் இன்னும் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால், தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க, மாநில அரசுகளே  நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியை கொள்முதல் செய்ய முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக தமிழகம் உள்ளிட்ட  பல்வேறு மாநில அரசுகள் உலகளாவிய டெண்டர் ஒப்பந்தத்தை கோரி உள்ளன.

இதன் மூலம் பல கோடி தடுப்பூசிகளை கொள்முதல்  செய்து மக்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளன. ஆனால் அதிலும் சிக்கல் எழுந்துள்ளது. சமீபத்தில் பஞ்சாப் மாநில அரசு அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியை வாங்க முயற்சி மேற்கொண்டது. ஆனால் அந்த  நிறுவனம் தனது கொள்கையின்படி மாநில அரசுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ள முடியாது என்றும், மத்திய அரசுடன் மட்டுமே  நேரடி பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும் மறுத்து விட்டது. இதே போல அமெரிக்காவின் மற்றொரு மருந்து நிறுவனம் பைசரும்  தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் மாநில அரசுகளுக்கு விநியோகிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக ரஷ்ய துணை தூதர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான ரஷ்ய துணை தூதர் ரோமன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகள் ஸ்புட்னிக் வி தடுப்பூசி கோரியுள்ளதாக தெரிவித்தார். இந்த விண்ணப்பங்களை கவனமாக பரிசீலித்து அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார்.


Tags : Sputnik ,India ,Russia , Is Sputnik V vaccine for state governments in India? .. Russia reports that it is considering requests
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...