மிகவும் ஆபத்தானவர் ரிஷப் பன்ட்: நியூசி. பந்துவீச்சு பயிற்சியாளர் பேட்டி

இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட். கடந்த சில மாதங்களாகவே அதிரடியாக விளையாடி வருகிறார். குறிப்பாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு தண்ணிக்காட்டிய அவரது ஆட்டம் இந்திய அணி வெற்றிபெற முக்கியக் காரணமாக இருந்தது. தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களிலும் அதிரடி காட்டினார். இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் காயத்தால் அவதிப்பட்டு வந்ததால், ஐபிஎல் 14வது சீசனில் டெல்லி அணிக்கு ரிஷப் பன்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்த அணி தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால், புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் நீடிக்கிறது. எஞ்சிய 31 லீக் போட்டிகளும் டி20 உலகக் கோப்பை துவங்குவதற்கு முன்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் குறித்து பேட்டி அளித்த நியூசிலாந்து அணி பந்துவீச்சு பயிற்சியாளர் ஜர்கென்சன் அளித்த பேட்டியில் ரிஷப் பன்டை புகழ்ந்து தள்ளினார். “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தீவிரமாகத் தயாராகி வருகிறோம். குறிப்பாக அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பன்ட்டிற்கு எதிராக வியூகங்களை அமைத்து வருகிறோம். சில நிமிடங்களில் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர்.

சமீபத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக ரிஷப் அற்புதமாக விளையாடினார். அவரின் விக்கெட் எடுப்பது மிக முக்கியம்” என்றார். மேலும் அவர் கூறுகையில், “ரிஷப் பன்ட்டிற்கு எதிராகப் பந்துவீசும்போது பவுலர்கள் பதற்றமடைந்துவிட்டால் அவ்வளவுதான். இந்த தவறை செய்ய மாட்டோம். அவருக்கு நெருக்கடி ஏற்படுத்தினால் சுலபமாக வீழ்த்திவிடலாம். இதை பவுலர்கள் மனதில் வைத்துச் செயல்பட்டால் மட்டுமே ரிஷப்பை வீழ்த்த முடியும். இந்திய அணியில் தரமான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சில் பும்ரா முதல் ஷர்துல் தாகூர் வரையிலும் ஸ்பின்னர்களில் அஸ்வின், ஜடேஜா பார்ட்னர்ஷிப் என இவர்கள் அனைவரும் நல்ல பார்மில் இருக்கின்றனர்” என்றார்.

Related Stories: