×

கிழக்கு மத்திய வங்கக்கடலில் உருவான ‘யாஸ்’ புயல் நாளை கரையை கடக்கிறது: ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திராவில் ‘அலர்ட்’

புவனேஸ்வர்: வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் நாளை ஒடிசா மாநிலம் பாரதீப் அருகே கரையை கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதனால், ஒடிசாவில் பரவலாக கனமழை கொட்டி வருகிறது. கிழக்கு மத்திய வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று புயலாக மாறியது. ‘யாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் மேலும் வலுவடைந்து இன்று காலை தீவிர புயலானது. வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசாவின் பாரதீப் மற்றும் மேற்குவங்கத்தை ஒட்டிய சாகர் தீவுகள் இடையே அதிதீவிர புயலாக நாளை நண்பகல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அப்போது மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் நெருங்கி வருவதால் ஒடிசா மாநிலம் கேந்திராபாரா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள், முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்திய விமானப்படை, 15 விமானங்களில் 950 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 16 விமானங்களும், 26 ஹெலிகாப்டர்களும் உடனடித் தேவைக்காகத் தயார் நிலையில் உள்ளன. கிழக்குக்கடற்படை மற்றும் அந்தமான் நிகோபார் கடற்படையைச் சேர்ந்த 8 கப்பல்கள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திர பிரதேச முதலமைச்சர்கள் , அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி, தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.  இதனிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘யாஸ்’ புயல் காரணமாக தமிழகத்தில் ராமேஸ்வரம், அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.


Tags : Yass ,eastern central Bangladesh ,Odisha ,Andra , 'Yas' to make landfall in East Central Bay of India
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை