×

மேற்கு வங்கத்தில் நாளை கரையை கடக்கிறது நெருங்கியது யாஸ் புயல்: முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

கொல்கத்தா: வங்கக்கடலில் உருவாகி உள்ள ‘யாஸ்’ புயல் நாளை மறுநாள் ஒடிசா-மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும்.  புயல் கரையை கடக்கும் போது 185 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என கொல்கத்தா வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் கடந்த திங்கட்கிழமை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இது, மேலும் வலுவடைந்து நேற்று அதிதீவிர புயலாக மாறியது. யாஸ் என பெயரிடப்பட்டுள்ள  இப்புயல் ஒடிசா-மேற்கு வங்கம் கடற்கரையில் பாராதீப்-சாகர் தீவுக்கு இடையே நாளை மதியம் கரையை கடக்கிறது. புயல் கரையை  கடக்கும் போது சுமார் 155-185 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்று கொல்கத்தா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில்  கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடலோர மாவட்டங்களான ஜார்கிராம், பூர்பா,  பாஸ்சிம் மெடினிபூர், வடக்கு மற்றும் தெற்கு 24 பார்கனாஸ், ஹவுரா ஹூக்ளி, கொல்கத்தா ஆகிய இடங்களில் அதிகனமழை  பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால்,  காலை 7 மணி முதல் 11 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 தற்போது, ‘யாஸ்’ புயல் காரணமாக மழையால்  பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வசிக்கும் மக்களை மீட்க தயார் நிலையில் மீட்பு குழுக்களை ஒடிசா அரசு நிறுத்தி உள்ளது. மேலும்,  தேசிய பேரிடர் மீட்பு குழு, ஒடிசா பேரிடர் விரைவு மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.  இதற்கிடையே புயல் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா மாநில முதல்வர்கள் மற்றும் அந்தமான்  நிக்கோபார் ஆளுநருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது, கொரோனா மருத்துவனைகள், ஆய்வகத்தில் மின்சாரம் தடையின்றி கிடைப்பது, மருத்துவ வசதிகள், ஆக்சிஜன் இருப்பு  உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ‘யாஸ்’ புயலை சமாளிக்க இந்திய கடலோர காவல்படை, கடற்படை, ராணுவ, விமானப்படை  தயார் நிலையில் இருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு

‘யாஸ்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மத்திய அரசு 3 மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒடிசா மற்றும்  ஆந்திராவுக்கு ₹600 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ₹400 கோடியும்  ஒதுக்கி உள்ளது. மேற்கு வங்கத்திற்கு பேரிடர் நிதி ஒதுக்குவதில்  தொடர்ந்து மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். அவர் நேற்று அளித்த  பேட்டியில், ‘‘ஒடிசா மற்றும் ஆந்திராவுடன் ஒப்பிடுகையில் மேற்கு வங்கத்தில் மக்கள் தொகை மற்றும் மாவட்டங்கள் அதிகம். இருந்தும்  குறைந்த அளவில் நிதி ஒதுக்கீடு செய்தது ஏன்? மாநிலத்தில் நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டுகிறது. இன்று காலை நடந்த  கூட்டத்தில் இதுகுறித்து நான் கேட்டபோது, இந்த பிரச்னையை பிறகு ஆலோசிக்கலாம். இது அறிவியல் ரீதியாக பார்க்கப்பட வேண்டிய  விஷயம் என கூறினார். எனக்கு அரசியல் அறிவியல் நன்கு தெரியும். அறிவியல் ரீதியாக பார்க்க தெரியாது என வெளிப்படையாக  அமித்ஷாவிடம் கூறினேன்’’ என்றார்.

Tags : Yas ,West Bengal , Yas storm approaching West Bengal tomorrow: Precautionary measures intensified
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் செய்வதை...