எடப்பாடி பழனிசாமி பல நூறு கோடி ஊழல்: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாஜி அமைச்சர் நிலோபர் கபில் பேட்டி

திருப்பத்தூர்: எடப்பாடி பழனிசாமி மீது பலநூறு கோடி ஊழல் புகார் உள்ளதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள்  பெண் அமைச்சர் நிலோபர் கபில் கூறியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில். இவர் வேலை வாங்கித் தருவதாக கூறி  பலரிடம் பெற்று தந்த மொத்தம் ₹6.63 கோடியை ஏமாற்றியதாக, அவரது உதவியாளர் பிரகாசம் காவல்துறையில் புகார் அளித்தார்.  இந்நிலையில், முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் நேற்று முன்தினம் வாணியம்பாடியில் உள்ள அவரது வீட்டில் நிருபர்களுக்கு அளித்த  பேட்டியில் கூறியதாவது:

நான் கடந்த 2006ம் ஆண்டு ஜமாத் சார்பில், நகர மன்ற தலைவராக அதிமுகவில் வெற்றி பெற்றேன். இதையடுத்து 2016ம் ஆண்டு நடந்த  தேர்தலில் சட்டமன்ற உறுப்பினரானேன். என்னுடைய உழைப்பை பார்த்து அம்மா எனக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவி  கொடுத்தார். அம்மாவுக்கு நான் விசுவாசியாக இருந்தேன். அவர் இறந்துவிட்டார். இதைபயன்படுத்தி, என்னை கட்சியில் இருந்து  வெளியேற்ற அமைச்சர் வீரமணி முழுமூச்சாக செயல்பட்டார்.  அதன்காரணமாக, இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் மனுத்தாக்கல்  செய்யும்போது என்னை அழைக்கவில்லை. எனினும், நானே வேட்புமனுத்தாக்கலுக்கு சென்றேன்.

ஆனால் வீரமணி ‘‘எதற்காக  அந்தம்மாவை அழைத்து வந்தீர்கள்’’ என வேட்பாளரின் தந்தையான கோபாலிடம் கேட்டார்.  இந்தநிலையில், 21ம் தேதி என்னை கட்சியில் இருந்து நீக்கியதாக தலைமை கடிதம் அனுப்புகிறது. நான் துக்கத்தில் இருக்கும்போது, இது  எந்த விதத்தில் நியாயம்? இந்த பிரகாசம் வாங்கின பணம் அனைத்திற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் சட்டரீதியாக  சந்திக்க தயாராக உள்ளேன்.  ஊழல் புகார் தான் என்னை நீக்கியதற்கு காரணம் என்று கூறினால்,  எடப்பாடி பழனிசாமி மற்றும் பல அதிமுக அமைச்சர்கள் பல நூறு  கோடி ரூபாய்க்கு ஊழல் செய்தது தொடர்பாக இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னரிடம் புகார் அளித்துள்ளார். ஊழல் புகாரில்  சிக்கியுள்ள அனைவரையும் அதிமுகவில் இருந்து நீக்குவார்களா?  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: