×

முதல் ஒருநாள் போட்டி: இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி

டாக்கா: வங்கதேச சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நேற்று முதல் போட்டி நடந்தது. டாஸ் வென்ற வங்கேதச அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் லிடன் தாஸ் டக்-அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து ஷாகிப் அல் ஹசனும் (15ரன்) அவுட்டானதால் வங்கதேச அணி 43/2 என தடுமாறியது. இருப்பினும், அடுத்துக் களமிறங்கிய முஷ்பிகுர் ரஹிம், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பாலுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். இதனால், வங்கதேச அணியின் ஸ்கோர் படிப்படியாக உயர்ந்தது. சிறப்பாக விளையாடி வந்த இக்பால் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து முகமது மிதுன் கோல்டன் டக் ஆனதால் வங்கதேசத்திற்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனைச் சமாளித்து விளையாடிய ரகீம் மற்றும் முகமதுல்லா இருவரும் இலங்கை பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினர்.

ரகீம் 87 பந்துகளில் 84 ரன்களும், முகமதுல்லா 76 பந்துகளில் 54 ரன்களும் அடித்து அசத்தியதால் வங்கதேசம் சுலபமாக 200 ரன்களை கடந்தது. இறுதியில் ஹொசைன் 27 ரன் எடுத்தார். இதனால், வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 257/6 ரன்கள் சேர்த்தது. 257 ரன்களை இலங்கை அசால்ட்டாக கடந்து வெற்றிபெற்றுவிடும் எனக் கருதப்பட்டது. தொடக்க வீரர்களாக குணதிலகா, குஷல் பெரேரா களமிறங்கினர். வங்கதேச பந்துவீச்சாளர்கள் மெகிடி ஹாசன், டஸ்கின் அகமது இருவரும் பவர்பிளேவில் சிறப்பாகப் பந்துவீசியதால் இலங்கை தொடக்க வீரர்கள் ரன்களை குவிக்க திணறினர். குணதிலகா 21 ரன்களும், பெரேரா 30 ரன்களும் மட்டுமே அடித்தார்கள். அடுத்தடுத்து களமிறங்கியவர்களும் சொதப்பியதால், இலங்கை அணி 34.1 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இலங்கை தோல்வியடைந்துவிடும் எனக் கருதப்பட்ட நிலையில் டெய்ல் என்டர்ஸ் ஹசரங்கா, இசுரு உதனா இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்குவிப்பில் ஈடுபட்டார்கள்.

இறுதியில் 7 ஓவர்களுக்கு 53 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஹசரங்கா (74), உதனா (21) இருவரும் சிறப்பாக விளையாடியதால் இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. ஆனால் கடைசி நேரத்தில் இருவரும் பெவிலியன் திரும்பியதால் இலங்கை அணிக்கு ஷாக் ஏற்பட்டது. இறுதியில் இலங்கை அணி 48.1 ஓவர்கள் முடிவில் 224 ரன்கள் மட்டும் சேர்த்து ஆல்அவுட் ஆகி தோல்வியைத் தழுவியது. அந்த அணியின் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும்,  முஷ்டாபிசுர் 3 விக்கெட்டும், மொகமது சைபுதின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது முஷ்பிகுர் ரஹிமுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வங்காளதேசம் 1-0 என முன்னிலை வகிக்கிறது.



Tags : Bangladesh ,Sri Lanka , First ODI: Bangladesh beat Sri Lanka by a huge margin
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...