மேல்விஷாரத்தில் 140 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்-அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்

ஆற்காடு : ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் இஸ்லாமியா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 100 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் 40 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 140 படுக்கைகள் கொண்ட கொரோனா நோய் தடுப்பு சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு கொரோனாவை ஒழிக்க மாவட்டம்தோறும் அமைச்சர்களை நியமித்துள்ளார். அமைச்சர்கள் மாவட்டம்தோறும் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து கொரோனா  ஒழிப்புப் பணிகளை  தீவிரமாக நிறைவேற்றி வருகிறோம்.

தமிழக முதல்வர்  போர்க்கால அடிப்படையில் கொரோனா நோய் தடுப்பு பணிகள், நோயாளிகளை குணப்படுத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று  ஓய்வில்லாமல் பணியாற்றி வருகிறார்.

திருப்பத்தூர், வேலூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் பங்களிப்போடு ஆயிரம் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. தடையின்றி ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்வரின்  செயல்பாடுகள்  அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

இதில், அரக்கோணம் எம்பி  எஸ்.ஜெகத்ரட்சகன், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகராட்சி ஆணையர் திருமால் செல்வம், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேஷ்பாபு ராஜ்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>