×

தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக இயக்கப்பட்ட 4,993 அரசு பேருந்துகளில் 6.60 லட்சம் பேர் பயணம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்

சென்னை: நாளை முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக, பொதுமக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 4,993 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், 6,60,384பேர் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். சென்னை மற்றும் பிற ஊர்களிலிருந்து பொதுமக்கள் பயணிக்க, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தலின்படி, நேற்று முன்தினம் மற்றும் நேற்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில்,  சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு 1,500 பேருந்துகளும், மாநிலத்தின் முக்கிய நகரங்களான கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே 3,000 பேருந்துகளும் இயக்கப்பட்டது.

நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை 6 மணி வரை, சென்னையிலிருந்து 1,331 பேருந்துகள் இயக்கப்பட்டு, 65,746 பயணிகள் பயணித்தனர். மற்ற ஊர்களிலிருந்து 3,662 பேருந்துகள் பல நடைகள் இயக்கப்பட்டு, 5,94,638 பயணிகள் பயணித்தனர். மொத்தம் 4,993 பேருந்துகள் வாயிலாக 6,60,384 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.   நேற்று இரவு 7 மணியளவில் அமைச்சர் ராஜகண்ணப்பன், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதை ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது, போக்குவரத்துத்துறை செயலாளர் சமயமூர்த்தி, விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முத்துகிருஷ்ணன் மற்றும் போக்குவரத்துத்துறை தலைவர் அலுவலக தனி அலுவலர் ஜோசப் டையஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Transport Minister , 6.60 lakh passengers in 4,993 state buses operated due to unrestricted curfew: Transport Minister
× RELATED சாலையை அடைத்து கூடாரம் அரியானா அமைச்சருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்