வேகப் பந்துவீச்சாளர்கள் வரிசைகட்டுவது இந்திய அணிக்கு சாதகம்...இயான் சேப்பல் கணிப்பு

சிட்னி: மிகத் திறமையான வேகப் பந்துவீச்சாளர்கள் அதிகம் இருப்பது இந்திய அணிக்கு சாதகமான அம்சமாகும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் அபாரமாக வென்ற இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பை பைனலில் அடுத்த மாதம் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு பலம் குறித்து இயான் சேப்பல் கூறியதாவது: கடந்த நூற்றாண்டை விட, தற்போதைய நிலையில் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை மிகவும் சிரமம் மிகுந்ததாக மாறியுள்ளது. வைரஸ் தொற்று இல்லாத பயோ பபுள் சூழலில் நீண்ட நாட்களுக்கு இருக்க வேண்டியது மிகவும் சிரமமானது. முன்பை விட அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருந்தாலும், இதிலும் பின்னடைவுகள் இருக்கத்தான் செய்கின்றன.

 வேகப் பந்துவீச்சாளர்கள் காயம் அடைவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துவிட்டன. இந்தியா  ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இது தான் முக்கிய பிரச்னையாக இருந்தது. இதை ஆஸ்திரேலிய அணியால் சமாளிக்க முடியவில்லை. அதே சமயம், இந்திய அணியில் மாற்று வேகப் பந்துவீச்சாளர்கள் அதிகம் இருந்ததால் வெற்றியை வசப்படுத்த முடிந்தது. ஆஸி. அணியில் நான்கு டெஸ்டிலும் ஒரே பவுலர்களை களமிறக்கினார்கள். அதனால் அவர்கள் கடைசி கட்ட போட்டிகளில் மிகுந்த சோர்வடைந்துவிட்டனர். ஆனால், இந்தியா இந்த சவாலை திறம்பட எதிர்கொண்டது. அவர்களிடம் ரிசர்வ் வேகப்பந்துவீச்சாளர்கள் அதிகம் இருப்பதது தான் இதற்கு காரணம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலிலும் இது நிச்சயம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.   இவ்வாறு இயான் சேப்பல் கூறியுள்ளார்.

Related Stories: