×

எமிலியா ரோமாக்னா ஓபன் கோரி காப் இரட்டை சாம்பியன்

பார்மா: இத்தாலியில் நடைபெற்ற எமிலியா ரோமாக்னா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் 17 வயது அமெரிக்க வீராங்கனை கோரி காப் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.  மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் சீனாவின் கியாங் வாங்குடன் மோதிய காப் அதிரடியாக விளையாடி 6-1, 6-3 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கோப்பையை முத்தமிட்டார். இது அவர் வென்ற 2வது டபுள்யு.டி.ஏ சாம்பியன் பட்டமாகும்.   முன்னதாக, 2017ல் 15வது வயது சிறுமியாக அவர் லின்ஸ் ஓபன் தொடரில் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தார். அந்த தொடரின் பைனலில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் ஜெலினா ஆஸ்டபென்கோவை வீழ்த்தினார். தற்போது 19 மாதங்களுக்குப் பிறகு 2வது பட்டம் வென்றுள்ளார்.

 இந்த வெற்றியால் ஒற்றையர் தரவரிசையில் காப் 5 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 25வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.   எமிலியா ரோமாக்னா தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு பைனலிலும் சக வீராங்கனை கேத்தி மெக்னல்லியுடன் இணைந்து களமிறங்கிய காப் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் டார்ஜியா ஜுராக்  ஆந்த்ரியா க்ளிபேக் (ஸ்லோவேனியா) ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.   களிமண் தரை மைதானத்தில் கோகோ காப் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றிகளைக் குவித்துள்ளது, எதிர்வரும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் அவர் மீதான எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரித்துள்ளது.


Tags : Emilia Romagna Open Cory Cop , Emilia Romagna Open Cory Cop Double Champion
× RELATED சில்லிபாயின்ட்..