×

சென்னையில் தளர்வில்லா முழு ஊரடங்கை மீறி வெளியில் திரியும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்

சென்னை: சென்னையில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கின் போது முறையான இ-பதிவு இல்லாமல் வெளியே வந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல் துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்படும் என்று மாநகர கூடுதல் கமிஷனர் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இன்று (24ம் தேதி) அதிகாலை 4 மணி முதல் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அரசு உத்தரவுப்படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி சென்னை மாநகர காவல் எல்லையில் முறையான இ-பதிவு இல்லாமல் வெளியே திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர தெற்கு கூடுதல் கமிஷனர் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கின்போது இ-பதிவு இல்லாமல் வெளியில் திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.

இது, வழக்கமாக போக்குவரத்து போலீசார் விதிக்கும் அபராத சலான் இல்லை. விதி மீறும் நபர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். நாளைக்கு சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்திற்கு சென்று நிற்க வேண்டும். நீதிமன்றத்தில் சிறை தண்டனை கிடைக்க கூட வாய்ப்புகள் உள்ளது.  சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு இருந்தால், அவரது எதிர்காலம் பாதிக்கப்படும்.  வங்கி ஊழியர் என்று கூறிக்கொண்டு இரவு 9 மணிக்கு மேல் வெளியே வந்தால் போலீசார் அனுமதிக்க மாட்டார்கள். அதேபோல் மின்சார வாரிய ஊழியர்கள், தொலைத்தொடர்பு துறை ஊழியர்கள் பணி நேரத்தை தவிர மற்ற நேரங்களில் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.  இதை மீறி வெளியே வருபர்கள் மீது நிச்சயம் வழக்கு பதிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

3,980 பேர் மீது வழக்கு: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த 10ம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டது. தொற்றின் தீவிரம் அதிகமாக இருப்பதால் இன்று முதல் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகரம் முழுவதும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி 153 இடங்களில் போலீசார் வாகன சோதனை சவாடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் சென்னையில் முறையாக இ- பதிவு இல்லாமல் வெளியே சுற்றியதாக 3,980 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து பைக், ஆட்டோ, கார் என மொத்தம் 3,446 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதவிர வாகனங்களில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியின்றி சுற்றிய நபர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர். அதன்படி முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றியதாக 3,243 பேர் மீதும், சமூக இடைவெளி இன்றி வாகனத்தில் பயணம் செய்ததாக 348 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து அபராதமாக மொத்தம் ரூ.8 லட்சத்து 97 ஆயிரம் வசூலித்தனர். கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக சென்னை முழுவதும் 55 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகளுடன் போலீசார் சீல் வைத்து அபராதம் வசூலித்தனர்.

Tags : Chennai , In Chennai, cases will be registered against those who go outside in violation of the entire curfew
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...