×

ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைகள் மருத்துவமனைகளுக்கு தடையற்ற மின்சாரம்: அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவு

சென்னை:  கொரானா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்படும் ஊரடங்கு மற்றும் கோடைகாலங்களில் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக  ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.  கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொரோனா சிகிச்சை மையங்கள், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகிய இடங்களுக்கு மின்வாரியம் மூலம் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

மேலும் சிறப்பு கவனம் செலுத்தி தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள மேற்பார்வை பொறியாளர்கள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து நகர் மற்றும் புறநகர் பகுதிகள் குறிப்பாக மலைவாழ் மக்கள் உள்ள பகுதிகளில் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள்/ பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பொது மக்களிடமிருந்து மின்தடை தொடர்பாக பெறப்படும் புகார்களை உடனுக்குடன் சரி செய்வதற்கு ஏதுவாக அனைத்து கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்.  பொதுமக்கள் மின்தடை மற்றும் பழுது தொடர்பான புகார் விவரங்களை 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.

மின்தடை/பழுது நீக்கம் தொடர்பாக புகைப்படத்துடன் கூடிய தகவல் தெரிவிப்பதற்காக 94458-50811 என்ற வாட்ஸ்அப் செயிலி எண் 24 மணி நேரமும் செயல்படும். பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்கள் தொடர் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



Tags : Minister ,Senthilpalaji , Uninterruptible power supply to hospitals by oxygen production plants: Order of Minister Senthilpalaji
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...