‘வெள்ளை கோட்’ அணிந்த தீய சக்திகள் என் தந்தையின் மரணம் ‘மருத்துவ கொலை’ - பாலிவுட் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட என்னுடைய தந்தையின் மரணம், மருத்துவ ரீதியிலான கொலை என்று பாலிவுட் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பாலிவுட் நடிகை சாம்பவ்னா சேத்தின் தந்தைக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் டெல்லியில் உள்ள மருந்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால், அவரது மரணம் ‘மருத்துவ ரீதியிலான கொலை’ என்று சாம்பவ்னா சேத் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், ‘டெல்லி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை வார்டில் எனது தந்தை கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனை நிர்வாகம் எனது தந்தையை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை. செவிலியர்கள் என்னிடம் தவறாக நடந்து கொண்டனர். இதுதொடர்பாக நான் வீடியோ வெளியிட்ட அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் எனது தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. எல்லா மருத்துவரும், கடவுளுக்கு சமமாக இருந்துவிட முடியாது. வெள்ளை கோட் அணிந்து கொண்டு, அன்புக்குரியவர்களைக் கொல்லும் தீயசக்திகளாகவும் சிலர் உள்ளனர். எனது தந்தை மருத்துவ ரீதியாக கொலை செய்யப்பட்டார். கொேரானா மட்டும் அவரைக் கொல்லவில்லை. தந்தையை இழந்த பின்னர், எனது வாழ்க்கையில் ஒருவித பயம் ஏற்பட்டுள்ளது.

இருந்தும், என் தந்தை கற்பித்தபடி உண்மைக்காக போராடப் போகிறேன். என்னுடைய தந்தைக்கு செய்ய வேண்டிய அனைத்து சடங்குகளையும் தற்போது செய்து கொண்டுள்ளேன். இந்த போராட்டத்தில் உங்களின் ஆதரவு எனக்க தேவை. காரணம், இந்த கடினமான காலங்களில் மருத்துவமனைகளுக்கு சென்ற ஒவ்வொருவரும் இதேபோன்ற மருத்துவ அலட்சியத்தால் உங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்திருப்பீர்கள். என்னுடைய வழக்கறிஞர்கள் மூலம் மருத்துவமனைக்கு சட்ட ரீதியான நோட்டீசை அனுப்புவேன்’ என்று தெரிவித்துள்ளார். நடிகை சாம்பவ்னா சேத், மாடல் அழகியாகவும், சின்னத்திரை நடிகையாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>