சட்டீஸ்கர் மாநிலத்தில் ஊரடங்கில் சுற்றிய இளைஞனுக்கு ‘பளார்’ விட்ட கலெக்டர்: லத்தியால் அடித்துக் கொல்ல உத்தரவிட்டதால் அதிர்ச்சி

சூரஜ்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் ஊரடங்கில் சுற்றிய இளைஞனை மாவட்ட கலெக்டர் அறைந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. மேலும், அந்த இளைஞனை லத்தியால் அடித்துக் கொல்ல போலீசாருக்கு உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா, கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளார். இந்நிலையில், அவர் சாலை மார்க்கமாக காரில் சென்ற போது, இளைஞர் ஒருவர் பைக்கில் சென்றார். அவரை மடக்கிய கலெக்டர் ரன்பீர் சர்மா, ஊரடங்கு அமலில் இருக்கும்போது எதற்காக வெளியே சுற்றிக் கொண்டு உள்ளீர்? என்று கேட்டார்.

அந்த இளைஞன் மருந்து வாங்க செல்வதாக கூறி தன்னுடைய செல்போனில் இருந்த சில ஆவணங்களைக் காட்ட முயற்சித்தார். ஆனால், அந்த இளைஞனின் பேச்சை கேட்க மறுத்த கலெக்டர் ரன்பீர் சர்மா, செல்போனை வாங்கி பார்த்துவிட்டு கீழே போட்டு உடைத்துவிட்டு சென்றார். சில அடி தூரம் சென்ற அவர், மீண்டும் அந்த இளைஞனை அழைத்தார். அந்த இளைஞனும் அருகில் வந்தான். பின்னர் திடீரென அந்த இளைஞனை கலெக்டர் ரன்பீர் சர்மா கன்னத்தில் அறைந்தார். அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இருந்தும் போலீஸ்காரர்களை அழைத்து, அந்த இளைஞனை லத்தியால் அடித்துக் கொல்லுங்கள் (மாரோ ஐஸி) என்று சொன்னார்.

அவர்களும் அந்த இளைஞனை லத்தியால் தாக்கினர். கீழே கிடந்த செல்போனை எடுத்துக் கொண்டு செல்லுமாறு கூறி விரட்டினர். பின்னர், அந்த இளைஞனுக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய கலெக்டர் ரன்பீர் சர்மா போலீசாருக்கு உத்தரவிட்டு அங்கிருந்து கிளம்பினார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் மற்றும் வீடியோ குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் மாநில கவுன்சில் செயலகத்தின் செயலாளர் சஞ்சீவ் குப்தா கூறுகையில், ‘மாவட்ட கலெக்டரின் செயல் வெறுக்கத்தக்க வகையில் உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிக்கு தகுதியற்ற செயலாகும்.

கண்ணியத்துடன் நடந்து கொள்வதற்கு பதிலாக, மிகவும் மோசமாக நடந்து கொண்டுள்ளார். சட்டீஸ்கர் மாநில தலைமைச் செயலாளரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது’ என்றார். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ரன்பீர் சர்மா தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், ‘அந்த இளைஞன் தனது பைக்கில் வேகமாக வந்தார். ஊரடங்கு அமலில் இருந்த போது எதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தீர்கள் என்று கேட்டதற்கு அவன் சரியான பதில் அளிக்கவில்லை. போலீசார் அவனை தடுக்க முயன்றபோது, பைக்கை அதிவேகமாக ஓட்டி தப்பிக்க முயன்றார்.

பின்னர் போலீசார் பிடித்து விசாரித்த போது, இரண்டு வெவ்வேறு காரணங்களை கூறினான்’ என்று சாக்குபோக்கு காரணங்களை தெரிவித்துள்ளார். கலெக்டரின் செயலை பலரும் கண்டித்து வரும் நிலையில், அவருக்கு எதிராக துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டீஸ்கர் மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories:

More
>