×

எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு என மத்தியஅரசே தகவல்: குஜராத்துக்கு 16.4%, தமிழகத்துக்கு 6.3% தடுப்பூசி: அமைச்சர் பேட்டி

சென்னை: சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் 70 படுக்கைகள் கொண்ட 36வது சித்த மருத்துவமனையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மதுரவாயல் எம்.எல்.ஏ. காரம்பாக்கம் கணபதி தலைமை வகித்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி:கோவையில் தடுப்பூசி போடுவதில் பாரபட்சம் காட்டுவதாக சமூக வலைதளங்களில் திட்டமிட்டு அவதூறு செய்தி பரப்பப்பட்டு வருகிறது. மத்திய அரசு மூலம் இதுவரை 78 லட்சத்து 49 ஆயிரம் தடுப்பூசி வந்துள்ளது. இதில் 71 லட்சத்து 52 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

2 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. 6 சதவீத தடுப்பூசி விரயமாகியுள்ளது. கோவையில் மட்டும் 5 லட்சத்து 4,370 ஊசிகள் போட்டுள்ளோம். எவ்வளவு தடுப்பூசிகள் வருகிறதோ அவ்வளவும் போடப்படும்.  தற்போது வீடுகள்தோறும் சென்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  கோவைக்கு மட்டும் 5 லட்சத்து 4,370 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. எந்த மாவட்டத்திற்கு எவ்வளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பதை இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

வானதி சீனிவாசன் எவ்வளவு தடுப்பூசி வந்தது, அதனை தெளிவுபடுத்த வேண்டும் என சமூக வலைதளம் மூலம் கேட்டுள்ளார். அதற்குரிய பதிலாக கூட இதனை எடுத்துக்கொள்ளலாம். எந்த வயதினருக்கான தடுப்பூசியும் கோவைக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்திய அளவில் மத்திய அரசு எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துள்ளது. இதில் குஜராத்துக்கு 16.4 சதவீதமும், தமிழகத்திற்கு 6.3 சதவீதம் மட்டும் தடுப்பூசி தந்துள்ளது. இதை குறையாக சொல்லவில்லை. சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் இதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஊரடங்கால் தடுப்பூசி போடும் பணி எந்தவிதத்திலும் பாதிக்காது. அடுத்த எத்தனை  அலைகள் வந்தாலும் அதனை தடுக்க 100 மருத்துவமனைகள் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். கருப்பு பூஞ்சை தொற்று நீரிழிவு, சிறுநீரக கோளாறுகள் உள்ள, எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையே அதிகம் பாதிக்கிறது. கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்கவும் போதுமான நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். அப்போது, அரசு அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Central Government ,Gujarat ,Tamil Nadu , How much for which state? Central Government information: 16.4% for Gujarat, 6.3% for Tamil Nadu: Minister Interview
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...