புனேவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு 2.3 லட்சம் கோவிஷீல்டு வருகை: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: புனேவில் இருந்து தனி விமானம் மூலம் பிரத்யேக மருந்து பெட்டகத்தில் சென்னைக்கு 2.3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்துள்ளது என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் தற்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 18 முதல் 44 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், தடுப்பூசி  தட்டுபாடு காரணமாக அந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

மேலும் தடுப்பூசிகளுக்கான கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும், உலகளாவிய அளவில் தடுப்பூசி வழங்களுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் கடந்த 20ம் தேதி  18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைப்போன்று நேற்று மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி 1 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்துள்ளது.

தமிழகத்திற்கு இதுவரை 83,31,720 தடுப்பூசிகள் வந்த நிலையில் நேற்று மீண்டும் தமிழகத்திற்கு 2.3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி புனேவில் இருந்து தனி விமானத்தில்  பிரத்யேக மருந்து பெட்டக்கத்தில் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. அவற்றை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரத்துறை அலுவலகத்தில் குளிர் சாதன அறையில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தேவையான  மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும் என்று பொசு காதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>