×

வெப்ப சலனம் காரணமாக பெய்து வரும் மழையால் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 5 ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு: பொதுப்பணித்துறை தகவல்

சென்னை: வெப்ப சலனம் காரணமாக பெய்து வரும் மழையால் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 4 ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்து உள்ளது என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும்  பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

குறிப்பாக, 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 578 மில்லியன் கன அடியாகவும், 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 656 மில்லியன் கன அடியாகவும், 3300 மில்லியன் கன அடி  கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2886 மில்லியன் கன அடியாகவும், 3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3028 மில்லியன் கன அடியாகவும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்  கோட்டை, தேர்வாய்கண்டிகை நீர் தேக்கத்தில் 436 மில்லியன் கன அடியாகவும் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் 16 மி.மீ, செம்பரம்பாக்கம் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் 30 மி.மீ, புழல் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் 18 மி.மீ, சோழவரம் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் 5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.  இந்த மழை காரணமாக  செம்பரம்பாக்கம் ஏரிக்கு  765 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதை தவிர்த்து பூண்டி ஏரிக்கு 10 கன அடி வீதமும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக 11.75 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 5 ஏரிகளிலும் 7.58 டிஎம்சியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ெதரிவித்துள்ளது. இதனால், ஏரிகளின் நீர் மட்டம் மேலும்  உயர வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,Public Works Department , Water level rise in 5 lakes to meet Chennai's drinking water demand due to heavy rains: Public Works Department Information
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...