சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் தங்க எடப்பாடிக்கு அனுமதி: ராஜா அண்ணாமலைபுரத்தில் வாடகை வீடு தேடும் ஓபிஎஸ்

சென்னை: தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு எடப்பாடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  கடந்த 2011ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் தங்கியிருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், எடப்பாடி  பழனிசாமி முதல்வர் ஆன பிறகும், அதே அரசு பங்களாவை பயன்படுத்தி வந்தார். தற்போது திமுக ஆட்சியை கைப்பற்றியதால், எடப்பாடி எதிர்க்கட்சி தலைவராகிவிட்டார். இவருக்கு, அமைச்சருக்கு நிகரான அந்தஸ்து வழங்கப்படுவதால்,  ஏற்கனவே அவர் தங்கியிருந்த பங்களாவிலேயே தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, எடப்பாடி பழனிசாமி அதே பங்களாவில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,  எம்எல்ஏ என்ற அடிப்படையில் அவர் வீட்டு வாடகைப்படியை பெற முடியாது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், 20க்கும் மேற்பட்ட அதிமுக அமைச்சர்கள் தங்கள் அரசு பங்களாக்களை காலி செய்துவிட்டனர். முன்னாள் துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் வசித்து வந்த அரசு பங்களா, தற்போதைய திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது’ என்றார்.

 இதனால் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பலர் வாடகை வீடுகளை தேடி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தமட்டில், அவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் வாடகை வீடு ஒன்றை பேசி முடித்துள்ளார்.  சபாநாயகர் தனபால் வசித்து வந்த அரசு பங்களா, தற்போதைய சபாநாயகர் அப்பாவுக்கு வழங்கப்பட உள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இருந்த அரசு பங்களா கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமிக்கு வழங்கப்பட உள்ளது.  இதேபோன்று பல திமுக அமைச்சர்கள் சென்னை, அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவிலேயே தங்க உள்ளனர். தற்போது அந்த பங்களாக்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

 தமிழக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற தலைமை அதிகாரிகள் (அரசு இல்லங்களை நிறுவுதல் மற்றும் பராமரித்தல் மற்றும் வசதிகளை வழங்குதல்) விதிகள், 1977-ன்படி, அவர்கள் பதவியில் இருந்து விலகிய பிறகும், மாதம் ரூ.250  வாடகையில் இரண்டு மாதங்களுக்கு தங்குவதற்கு சலுகை காலம் வழங்கப்படும். முன்னாள் அமைச்சர்களை தங்களது பங்களாக்களை காலி செய்யுமாறு பொதுப்பணித் துறை சார்பில், எந்த முன் அறிவிப்பும் வெளியிடவில்லை.  ஆனாலும்,  சலுகை காலம் இன்னும் இருப்பதால் 3 முன்னாள் அமைச்சர்கள் மட்டும் இன்னும் 2 மாதங்கள் தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி கோரியிருந்தனர். அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இருந்தும், அவர்களில் ஒருவர் காலி செய்துவிட்டார்.  முன்னாள் அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாக்களை காலி செய்யும் வரை, அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அரசின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories:

>