×

சவுதியில் மணமகன்... கேரளாவில் மணமகள் ஆன்லைனில் திருமணம் செய்து 9 மாதம் ஆகியும் சந்திக்கவில்லை: கொரோனாவால் தவிக்கும் புதுமண தம்பதி

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம் ஆலப்புழா முல்லச்சேரி பகுதியை  சேர்ந்தவர் நாசர் செய்யதலி மகன்  ஆஷிப் (26). இவர் சவுதி அரேபியாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக  பணிபுரிந்து வருகிறார். இவரது பெற்றோரும்   சவுதி அரேபியாவில்தான் உள்ளனர்.  கோட்டயம் அருகே சங்கணாசேரி பகுதியை சேர்ந்தவர் அப்துல் சமது மகள்   ஆமினா. இவர்களது குடும்பமும் சவுதியில்தான் வசித்து வருகிறது. ஆஷிப் மற்றும் ஆமினாவுக்கு இடையே கடந்த 2019ம்  ஆண்டு திருமண  நிச்சயதார்த்தம் சங்கணாசேரியில் நடந்தது. பின்னர்  இருவரும் சவுதி சென்று விட்டனர்.

இந்த நிலையில் படிப்பதற்காக கடந்த ஆண்டு ஆமினா   ஊர் திரும்பினார். கடந்த ஆண்டு ஜூலை மாதம்  இருவருக்கும் திருமணம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு  காரணமாக ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளி  வைக்கப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில்  ஆஷிப்பால் ஊருக்கு வரமுடியவில்லை.

இதையடுத்து ஆகஸ்ட் 2ம்  தேதி  ஆஷிப்புக்கும், ஆமினாவுக்கும் காணொளி மூலம் திருமணம் நடத்தப்பட்டது. ஆனால்  அதன்பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆமினாவால் சவுதிக்கு  செல்ல முடியவில்லை. இதுபோல  ஆஷிப்பால் கேரளாவுக்கும்  வரமுடியவில்லை. இதனால் புதுமண தம்பதிகள் போன் மூலம் மட்டுமே பேசி  வருகின்றனர். திருமணமாகி 9 மாதங்கள் கடந்த பிறகும் புதுமண தம்பதி  நேரில் சந்திக்க முடியாமல் தவித்து வருகிறது.

Tags : Saudi ,Kerala , Groom in Saudi ... Bride in Kerala has not met for 9 months after getting married online: Newlywed couple suffering from corona
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்